முக்கிய செய்திகள்

ராபர்ட் ஓ பிரையனை அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்து அறிவித்துள்ளார்

259

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வந்த ஜான் போல்டன் கடந்த செப்டம்பர் 11ந்தேதி, அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதுபற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், தனது பல ஆலோசனைகளுக்கு போல்டன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், அரசு நிர்வாகத்துடன் அவரது செயல்பாடுகள் ஒத்துப்போகவில்லை என்றும் குற்றச்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு 5 பேர் கொண்ட பட்டியலை அதிபர் டொனால்ட் டிரம்ப் இறுதி செய்தார். அதில், ராபர்ட் ஓ பிரையன், ரிக் வாடெல், லிசா கார்டன்-ஹேகர்டி, பிரெட் பிளீட்ஜ் மற்றும் கெய்த் கெல்லாக் ஆகிய 5 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்திருத்தது.

இந்நிலையில், 5 பேர் கொண்ட பட்டியலில் ஒருவரான ராபர்ட் ஓ பிரையனை அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்து அறிவித்துள்ளார். கடந்த 2 வருடங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு தேர்வாகியுள்ள 4வது நபர் ராபர்ட் ஓ பிரையன் என்பது கவனிக்கத்தக்கது.

சவுதி அரேபியா எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல்கள், ஈரானுடனான பதற்றமான சூழல், தலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் தற்காலிக நிறுத்தத்தால் ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் என பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில், ராபர்ட் ஓ பிரையன் இந்த பதவிக்கு தேர்வாகியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ராபர்ட் ஓ பிரையன் பேசுகையில்,”அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் ராணுவத்தினை மீண்டும் கட்டமைப்பது ஆகியவற்றில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும். சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை பற்றி தனிப்பட்ட முறையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஆலோசனை வழங்குவேன்” என்று தெரிவித்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *