முக்கிய செய்திகள்

ரோஹிங்யா விவகாரம் மிகவும் பாரதூரமானது என்று ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

419

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இந்தச்சம்பவம் மிகவும் பாரதூரமானதென ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

மியன்மார் அரச படையினர் கொலை மற்றும் கூட்டு பாலியல் வன்புணர்வு குற்றங்களை புரிந்ததாகவும், அது தொடர்பில் அரச படைகளின் கட்டளைத் தளபதி மற்றும் ஜெனரல் தர தளபதிகள் ஐவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் குட்ரெஸ் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மார் அரச படைகளால் முன்னெடுக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள், அனைத்துலக சட்டத்தின் அடிப்படையில் பாரிய தண்டனைக்குரிய குற்றங்கள் என்று எவ்வித சந்தேகமும் இன்றி நிபுணர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரோஹிங்யா சம்பவம் தொடர்பாக அறிக்கையிட்ட ரொயிட்டர்ஸ் செய்திச் சேவையின் இரண்டு ஊடகவியலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும், இவர்களை விடுவிக்க ஐ.நா. பாதுகாப்புச் சபை தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்குமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அப்பாவி பொதுமக்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை, கொலை செய்தமை மற்றும் உயிருடன் எரித்தமை போன்ற மன்னிக்க முடியாத குற்றங்கள் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ஐ.நா.விற்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலேயும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களது மதம் மற்றும் இன அடையாளத்தைத் தவிர இந்தக் குற்றங்களுக்கு வேறு எதுவும் காரணம் அல்லவென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா.வின் அகதிகளுக்கான முகவரகத்தின் உயர்ஸ்தானிகர் கேட் பிலன்சட், ரோஹிங்ய விவகாரம் தொடர்பில் அனைத்துலக ஆதரவு அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமது குழந்தைகள் உயிருடன் நெருப்பில் வீசப்படுவதை எந்தத் தாயும் பொறுத்துக்கொள்ள மாட்டார் எனவும், அவ்வாறான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதெனவும் குறிப்பிட்டுள்ள கேட் பிலன்சட், தான் சந்தித்த தாய்மார் மற்றும் குழந்தைகள் தமது துன்பகரமான அனுபவங்களை பகிர்ந்துகொண்டதாக கூறியுள்ளார்.

மியன்மாரில் பூர்வீக குடிகளாக வாழ்ந்துவந்த ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது, கடந்த 2015ஆம் ஆண்டு அந்த நாட்டு அரச படைகள் தாக்குதல் நடாத்தியதுடன், மக்களின் குடியிருப்புகள் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில், இதனால் சுமார் 7,00,000 ரோஹிங்ய மக்கள் நாட்டிலிருந்து தப்பிச் சென்றதோடு, பலர் அண்டை நாடுகளின் அகதி முகாம்களில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *