முக்கிய செய்திகள்

வடக்கில் காணிகளை விடுவிக்கும் இராணுவத்தின் முடிவு முட்டாள்தனமானது என்று சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்

402

வடக்கில் பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதற்காக இராணுவ முகாம்களை மூடி, முகாம்களின் அளவைச் சுருக்கும் சிறிலங்கா இராணுவத் தளபதியின் முடிவு முட்டாள்தனமானது என்று இலங்கை அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ள அவர், விடுதலைப் புலிகளை அழித்து, அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான பின்னணியையும் அந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்குமான சூழலை உருவாக்கியிருக்கின்ற போதிலும் அது போதுமானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சில தமிழ் அரசியல்வாதிகள் இன்னமும் பிரிவினைவாதம் பேச முயன்று கொண்டிருக்கும் நிலையில், அதனை அனுமதிக்க முடியாது என்பதுடன், தெற்கிலுள்ள சிங்கள மக்கள் அதற்கு இணங்கமாட்டார்கள் எனவும், அதிகாரப் பகிர்வை பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் எல்லா இடங்களிலும் இராணுவத்தினரின் பிரசன்னம் இருக்க வேண்டிய தேவை உள்ளது எனவும், இராணுவம் தெற்கில் தான் இருக்க வேண்டும் – வடக்கில் இருக்கக் கூடாது என்று கூறமுடியாது எனவும், இராணுவத்தின் பருமனைக் குறைக்க வேண்டிய தேவை இல்லை என்பதே தனது கருத்து என்றும் அவர் தெரிவித்து்ள்ளார்.

வடக்கில் சில பகுதிகளில் இருந்து இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்றக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ள அவர், பொதுமக்களின் காணிகளை திரும்ப அவர்களிடம் ஒப்படைப்பதற்காக, சில இராணுவ முகாம்களை மூடி, இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் அளவைக் குறைப்பது பற்றி இராணுவத் தளபதி பெருமையாகப் பேசியதைக் கேள்விப்பட்டதாகவும், அது முட்டாள்தனமானது என்றும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மக்களுக்கு மீள வழங்குவதற்காக, முகாம்களை மூடுவதையிட்டு பெருமைப்பட முடியாது எனவும், இராணுவத் தளபதி இப்போது இராணுவத்தினரை விலக்கி அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்த முனைகிறார் என்ற போதிலும், அவர் முகாம்களை மூடி வருவது குறித்து களமுனைத் தளபதிகள் சிலர் மகிழ்ச்சியடையவில்லை எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *