முக்கிய செய்திகள்

வடக்கில் தமக்கு குறுகியகால அதிகாரங்ளை வழங்குமாறு சிறிலங்கா இராணுவம் வலியுறுத்தியுள்ளது

414

வடக்கில் உள்ள சில குழுக்களை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினருக்கு குறுகிய காலத்திற்கு ஏதாவது சில அதிகாரங்கள் அவசியமாகும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி – தலதா மாளிகைக்கு இன்று முற்பகல் சென்றிருந்த இராணுவத் தளபதியிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத குழுக்களை கட்டுப்படுத்த இராணுவத்தினருக்கு அதிகாரம் அவசியம் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் கட்டளைத் தளபதி அண்மையில் தெரிவித்திருந்ததை குறிப்பிட்ட ஊடகவியலாளர்கள், குறித்த அந்த அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என்று இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள இராணுவத் தளபதி, இது குறித்து எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும், அத்துடன் பாதுகாப்பு சபை மற்றும் புலனாய்வு பிரிவின் கலந்துரையாடல்களின் போதும் இது குறித்து கலந்துரையாடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதே நேரம் இராணுவத்தின் புலனாய்வு தகவல்களை காவல்துறையினருக்கும், சிறப்பு அதிரடிப் படையினருக்கும், வழங்குவது குறித்து எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்மானத்தை மேற்கொண்டு குறிப்பிட்ட சில அதிகாரங்களை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டும் வழங்கினால் அதனை தம்மால் சரியாக செயற்படுத்த முடியும் என்றும் சிறிலஙகா இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *