முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வடக்கில் மக்களின் காணிகள் விடுவிப்பை விரைவுபடுத்துமாறு. மகாவலி எல் வலைய திட்டத்தை நிறுத்துமாறும் இலங்கை சனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது

600

வடக்கில் காணி விடுவிப்பு மற்றும் வீட்டுத் திட்ட நிர்மாணம் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான சிறப்பு செயலணி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று நாடாளுமன்ற கட்டடத்தில் கூடியதுடன், இரண்ட மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் மூன்று மணித்தியாலங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்த சந்திப்பின்போது மகாவலி ‘எல்’ வலயம் தொடர்பான விவகாரம், படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதுடன், தமிழ் மக்களின் காணிகளை அவர்களுக்கே மீள வழங்குவது தொடர்பில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று இதன் போது குறிப்பிட்டுள்ள மைத்திரிபால சிறிசேன, அக்காணிகளை விரைவாக காணிச் சொந்தக்காரர்களுக்கு மீளக் கையளிக்குமாறு உயர் படை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் விடுவிக்கப்படாமலுள்ள காணிகளில் உள்ள பாடசாலைகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அந்தப் பாடசாலைகளை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள 25,000 வீட்டுத் திட்டம் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டபோது, இரண்டு அமைச்சர்களுக்கிடையிலான இழுபறி நிலையே வீடமைப்புத் திட்டத்தின் தாமதத்துக்கு காரணம் என்று இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், இரணடு அமைச்சர்களும் கலந்துரையாடி விரைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் சனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மஹாவலி எல் வலயத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்தமுறை நடைபெற்ற செயலணிக் கூட்டத்தில், மஹாவலி தொடர்பில் எதுவித மாற்றுக் குடியேற்றங்களும் இல்லையென சனாதிபதி தெரிவித்திருந்த போதிலும், கடந்த ஓகஸ்ட் மாதம் வழங்கப்பட்ட மீன்பிடி அனுமதிகள் மற்றும் குடியேற்றம் சம்பந்தமான ஆதாரங்களை, இந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, இவற்றை உடனடியாகத் தடைசெய்ய வேண்டுமென சனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது “மஹாவலி எல்” திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள சனாதிபதி, வடக்கில் மேற்கொள்ளப்படும் மஹாவலித் திட்டங்களை உடனடியாக நிறுத்தும்படி, திட்டப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *