வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து கவனஞ்செலுத்தியதுடன், நுண்கடன் தொடர்பான பிரச்சினை குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் சம்பந்தமான கலந்துரையாடல் இன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இதில், இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பங்கேற்று யாழ்ப்பாணத்தில் முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், “யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தோம்.
குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் வர்த்தக சங்கங்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து ஆராய்ந்திருந்தோம்.
பனை அபிவிருத்தி தொடர்பாகவும் பனை உற்பத்திகளை எவ்வாறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதையும் ஆராய்ந்ததுடன் புகையிலை உற்பத்தி மற்றும் புகையிலை உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளோம்.
வட பகுதியிலுள்ள சிறு தொழில் முயற்சியாளர்கள், நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள் தாமாகவே தமது நிலையை மேம்படுத்திச் செல்வது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.