முக்கிய செய்திகள்

வடக்கு கிழக்கினை முடக்குவதற்கு அணி திரள்க:மாவை அறைகூவல்

132

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு – கிழக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும். அதன் மூலம் இந்த அறவழிப் போராட்டத்தை வெற்றியடைய வைக்க வேண்டும் என்று  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறைகூவல் விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அரச நிர்வாகம் இடித்து அழித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழ் மக்களின் நினைவிடங்கள் கௌரவப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் வடக்கு – கிழக்கு தழுவிய மாபெரும் ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கட்சியினர், சர்வமத பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர் மற்றும் யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர் ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.

போரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதும், நினைவிடங்கள் பேணிப் பாதுகாக்கப்படுவதும் உலகப்பொது நீதி. அதையும் மீறி யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களின் ஆன்மாவை உலுக்கியுள்ளது.

தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை வரிசையாக நசுக்கி வரும் இந்த அரசின் சிந்தனையின் இறுதி வடிவமாக, யாழ். பல்கலைகழகத்தில் அமைந்திருந்த தூபியை இடித்தழிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. எஞ்சிய எமது நினைவிடங்களையாவது பேணிப் பாதுகாக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் நினைவிடங்களைக் கௌரவமாகப் பேண வேண்டும். எமது நிலைப்பாட்டை ஜனநாயக வழியில், அழுத்தம் – திருத்தமாக எதிர்வரும் திங்கட்கிழமை அரசுக்குச் சொல்வோம்.

இதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைத்து, நாளைய ஹர்த்தால் போராட்டத்தை வெற்றியடையச் செய்வோம்” – என்றுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *