முக்கிய செய்திகள்

வடக்கு-கிழக்கின் குடிப்பரம்பலை மாற்றும் நோக்கில் சிங்களத் தலைமைகள் செயற்படுவதாக சித்தார்த்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்

656

வடக்கு-கிழக்கின் குடிப்பரம்பலை முழுமையாக மாற்றும் நோக்கில் சிங்களத் தலைமைகள் மிகத்தெளிவான கொள்கையுடன் செயற்படுகின்றனர் என்று தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற நில ஆக்கிரமிப்புக்கு எதிரான மாபெரும் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் பெரும்பான்மை தலைமைகள் மிகத்தெளிவான கொள்கையுடன், வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மண்ணை முழுமையாக குடிப்பரம்பலை மாற்றவேண்டும் என்ற நோக்கத்துடன், அம்பாறையில் கல்ஓயா திட்டத்தில் ஆரம்பித்து இன்றுவரை தொடர்ந்து 70 ஆண்டுகளாக செயற்படுத்தி வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெலிஓயா திட்டம் மூலம் எங்கள் தாயகபூமியை இரண்டு கூறாக ஆக்கிவிடலாம் என்ற ஒரு நினைப்பில் இந்த அரசாங்கமும் இதற்கு முன்னர் இருந்த அரசாங்கமும் நடவடிக்கையினை எடுத்து வருகின்றது எனவும், எனினும் இந்த பேரணியில் உள்ள மக்களை கண்டால் அவர்கள் அந்த நினைப்பினை மாற்றிக்கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வளவு பெருந்திரளான தமிழ் மக்கள் எங்கள் நிலங்களை பறிகொடுக்கமாட்டோம் என்று மிகத்தெளிவாக கூறுகின்றார்கள் என்பதை அரசிற்கு மாத்திரம் அன்றி உலகிற்கும் காட்டியுள்ளோம் எனவும், இதனை இந்த அரசு உணர்ந்து கொண்டு உடனடியாக இந்த திட்டத்தினை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் தாங்களும் இணைந்து கொள்கின்றோம் என்றும் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *