வடக்கு கிழக்கில் கறுப்புக் கொடிகளுடன் பல்வேறு கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றன.

325

இலங்கையின் 71-வது சுதந்திர தினமான இன்றைய நாளை கரிநாளாக கடைப்பிடித்து வடக்கு கிழக்கில் கறுப்புக் கொடிகளுடன் பல்வேறு கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றன.
பூரண சுதந்திரம் தேவை எனக் கோரி யாழ்ப்பாண பிரதான பேரூந்து தரிப்பிடத்திற்கு எதிரில் மக்கள்; போராட்டமொன்று நடைபெற்றுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்பதனை இலங்கை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டுமென போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறையில் மிக நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலான பதாகைகளை காட்சிப்படுத்தி போராட்டம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறே கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசியல் கைதிகளை விடுதலைச் செய், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வினை வழங்கு, சர்வதேச விசாரணை வேண்டும், நிலங்களை ஆக்கிரமிக்காதே, இராணுவமே வெளியேறு, வடக்கு கிழக்கை பிரிக்காதே, ஒற்றையாட்சி வேண்டாம், இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பிய வண்ணம் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கொலையாளிகளை நீதிபதியாக்கும் 30ஃ1 தீர்மானத்திற்கு மேலும் கால அவகாசம் கொடுத்து நீதியை இழுத்தடிக்காது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்த வேண்டும் என்றும் சர்வதேசத்திடம் மக்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
.தென்னமரவாடியை ஆக்கிரமிக்காதே, வெடுக்குநாறி மலையை விட்டு வெளியேறு, கோப்பாபிலவு மண்ணை உரியவர்களிடம் கொடு, மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம் சர்வதேசமே விசாரணை செய், நாட்டின் சுந்திரம் சிங்கள மக்களுக்கு மட்டுதானா போன்ற கோரிக்கைகளும் கோசங்களும் முன்வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், எஸ்.சிறிதரன், வட மாகாண முன்னாள் முதல்வர் சிவி. விக்னேஸ்வரன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன், அருந்தவபாலன், சிவாஜிலிங்கம், பல்கலைகழக மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என்று பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
அவ்வாறே மட்டக்களப்பு வந்தாறு மூலைப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *