வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் விரும்பவில்லை அதனால் அந்தக் கோரிக்கை கைவிடப்பட்டதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி, வவுனியா, கொழும்பு, மீண்டும் கிளிநொச்சி என பல்வேறுபட்ட கூட்டத் தொடர்களுக்குப் பின்னர், ஒரு பொதுவான அறிக்கை தயாரிப்பிற்கு தமிழ் தேசியக் கட்சிகளில் எல்லோரும் ஒன்றுபட்டார்கள்.
இதேவேளை, தாங்கள் மாத்திரம்தான் ஒரேயொரு தமிழ் தேசியவாதிகள் என்றும் மற்றவர்கள் எல்லாம் துரோகிகள் என்றும் சொல்லப்பட்டு வந்த நிலையில், இவ்வாறு சொன்னவர்களின் வரைபுகளில் இனப்படுகொலை என்ற ஒரு வார்த்தை இடம்பெற்றிருக்கவில்லை.
அதற்குப் பின்னர், எங்களது தரப்பில் இருந்து, நான், சிவாஜிலிங்கம் போன்றோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பொறுப்புக் கூறல் நடவடிக்கை விசாரணைக்கு இனப்படுகொலை என்ற விடயம் கொண்டுபோகப்பட வேண்டுமென வலியுறுத்தினோம்.
இதன் பின்னர்தான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை ஏற்றுக் கொண்டார். அவர் ஏற்றுக்கொண்டதன் பின்னர், சுமந்திரனுத் உடன்பாடு இல்லையென்றாலும் ஏற்று கொள்கின்றேன் என்றார்.
இவ்வாறான நடவடிக்கை அனைத்தும் நடந்து முடிந்ததன் பிற்பாடு, இதில் கையெழுத்து வைப்பதை ஒரு பிரச்சினையாக்கி சிறுபிள்ளைத் தனமாக மாற்றினார்கள். இந்தத் தயாரிப்பில் பலருடைய பங்களிப்பு இருந்தது.
கட்சிகள் என்று பார்க்கும் போது தமிழரசுக் கட்சி மிகப் பழமையானது. ஆயுதம் எடுத்துப் போராடிய கட்சிகளாக ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளோட் ஆகியனவும் இருக்கின்றன.
இவர்கள் யாரும் கையெழுத்து வைக்கக்கூடாது என்றும் நேற்று வந்தவர்கள் கையெழுத்து வைக்கலாம் என்றும் சொல்வதெல்லாம் எனக்குப் புரியவில்லை. என்று குறிப்பிட்டுள்ளார்.