முக்கிய செய்திகள்

வடக்கு கிழக்கு இணைக்கப்படாது என்று தெரிகின்ற நிலையில், கூட்டமைப்பின் அடுத்த கட்ட செயற்பாடுகள்!

960

தமிழர் தாயக பூமியான வடக்கு கிழக்கு இணைக்கப்படாது என்று உறுதியாக தெரிகின்ற நிலையில், கூட்டமைப்பின் அடுத்த கட்ட செயற்பாடுகள் எவ்வாறு அமையவுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்குக் கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்று சுமந்திரன் தெரிவித்துள்ளமை தொடர்பில், யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பன சாத்தியமில்லை எனின், சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற குழு அரசியல் சாசனத்தில் எந்த அடிப்படையில் செயற்பட போகின்றதென மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

1972ஆம் ஆண்டு குடியரசு யாப்பு, 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டு வந்த யாப்பு என்பவற்றை தமிழரசு கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் அங்கீகரிக்காத காரணத்தினால், அரசியல் சாசன உருவாக்கத்தில் அவை கலந்துகொள்ளவில்லை என்பதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

வெளிப்படைத்தன்மை இல்லாமல் பல விடயங்கள் நடந்துகொண்டிருப்பதாகவும், இப்போது உண்மைகளை வெளிக்கொணர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதனால், எந்த அடிப்படையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படுகின்றது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை, இறைமை ஆகியவற்றை முன்னிறுத்தி, அவற்றின் அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை எட்டுவதற்கு வாக்களிக்குமாறும், இவற்றிற்கு மேலாக தமிழரின் சுயாட்சியை வலியுறுத்தப் போவதாகவும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தெரிவித்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்ததுடன், தேர்தல்களிலும் அதற்கான மக்கள ஆணையைப் பெற்று வெற்றிபெற்றிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் தற்போது வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை, இறைமையும் சுய நிர்ண உரிமையும் நாம் கோரவில்லை என்று பகிரங்கமாகவே இவர்கள் கூறுவது எந்த அடிப்படையில் என்பது தொடர்பில் தெளிவுபடுத்தவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மைக்காலம்வரை தமிழ்மக்கள் விரும்பாத, ஏற்றுக்கொள்ளாத தீர்வு ஒன்றினை தாம் ஏற்கப்போவதில்லை என்று கூட்டங்களில் உரையாற்றிவந்த இரா.சம்பந்தனின் உரைகள் மாறத் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு கிழக்கு இணைவது சாத்தியமில்லை என்று சம்பந்தனும் சுமந்திரனும் கருத்து வெளியிட்டு வருவைதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *