வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது!

1102

வடக்கு கிழக்கு இணைப்பு உடனடிச் சாத்தியமற்றது என்று நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைபின் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என்று அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுமந்திரன், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை பெற வேண்டியது அவசியமே என்ற போதிலும், அவர்களுடைய ஒப்புதலை பெற்று உடனடியாக இரண்டு மாகாணங்களையும் இணைக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களாகும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முஸ்லிம் தரப்புக்களுடன் தாம் தற்போது பேசி வருவதாகவும், ஆனால் போர்க் காலத்தில் உண்டான சில கசப்பு உணர்வுகள் தற்போதும் முஸ்லிம் மக்களின் மனங்களில் இருப்பதாகவும் குறிப்பிட்ட சுமந்திரன், அவை களையப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை பெறுவது முஸ்லிம் தலைவர்களாலும் உடனடியாக முடியாது என்றும், தற்போது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தரப்புடன் இணைந்து மாகாணசபையில் ஆட்சியமைத்துள்ளமையானது நம்பிக்கை தருவதாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் திடீரென மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பது உடனடியாக நடைமுறை சாத்தியமற்றது என்றும், எனவே 2 அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைவதற்கான பொறிமுறையை புதிய அரசியலமைப்பில் இணைத்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு இணைத்து கொண்டால் காலப்போக்கில் இரண்டு மாகாணங்களும் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *