முப்பது ஆண்டுகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்காது அவர்களை வறுமைக்கோட்டின் கீழ் வைத்திருக்கவும், அடக்குமுறையை கையாளவுமே அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று பஉரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
குருந்தூர் மலை பிரதேச இடத்தை தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்து வருகின்றது, எனினும் 1933 ஆம்ஆண்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இது தமிழர் பகுத்து என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பரம்பரை பரம்பரையாக தமிழர்கள் இந்த இடத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனினும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த பகுதியை இராணுவம் சுற்றிவளைத்து ஆக்கிரமித்துள்ளது.
இதனால் தைபொங்கல் தினத்தில் எமது தமிழர்கள் அங்கு செல்ல முடியாத நிலைமை உருவாகியது. கேட்டால் தொல்பொருள் திணைக்களம் இந்த இடத்தில் ஆய்வுகளை செய்வதாக கூறியுள்ளனர்.
2018 ஆம் ஆண்டில் இந்த இடத்தில் பெளத்த தேரர் ஒருவர் புத்தர் சிலை ஒன்றினை வைத்து பெளத்த விகாரையை அமைக்க முயற்சித்தார். பின்னர் நீதிமன்றம் இதற்கு இடைக்கால தடை விதித்து அவர்களின் நடவடிக்கைகளை தடுத்தனர்.
எனினும் மீண்டும் இதே இடத்தில் தொல்பொருள் திணைக்களம் ஆய்வுகளை மேற்கொள்வதாக கூறி விகாரை ஒன்றினை அமைக்கும் முயற்சிகளை எடுத்துள்ளனர்.
எனவே எமது மக்களை இலக்கு வைத்து நடத்தும் அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என்றார்.