முக்கிய செய்திகள்

வடக்கு கிழக்கு மாகாணத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முன்னர் அரசியல் தீர்வு முக்கியம் என்பதனை முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்

357

வடக்கு கிழக்கு மாகாணத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முன்னர் அரசியல் தீர்வு முக்கியம் என்பதனை முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான சனாதிபதி செயலணியினை புறக்கணிக்க வலியுறுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணத்தின் பொருளாதார முன்னேற்றம் பற்றிய சனாதிபதி செயலணியில் பங்குபற்ற, வடமாகாணத்தில் இருந்து கௌரவ ஆளுநரைத் தவிர தானும் தனது பிரதம செயலாளரும் மட்டுமே அழைக்கப்பட்டிருந்ததையும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அந்தக் கூட்டத்திற்கு தான் செல்லவில்லை என்றும், இது சம்பந்தமாக தான் சனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை இத்துடன் அனுப்பி வைப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், குறித்த கூட்டத்தில் தான் பங்குபற்றியிருந்தால் அரசியல் ரீதியாக பல நன்மைகளைப் பெற்றிருக்க முடியும் என்ற போதிலும், தமிழர்கள் தங்கள் பிரச்சினைக்கான தக்க தீர்வொன்றை பெறமுடியாதே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் 16 பேருக்கும் இலங்கை சனாதிபதி குறித்த செயலணிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் எனவும், பொருளாதார ஊக்கிகளே அரசியல் தீர்விலும் பார்க்க தமிழர்களுக்கு இத்தருணத்தில் முக்கியத்துவம் அளிக்கக் கூடியவை என்று தாங்கள் நினைத்தால், குறித்த கூட்டத்தில் பங்கு பற்ற தாங்கள் முடிவெடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இல்ஙகை அரசாங்கமானது பொருளாதார ரீதியாக எங்களுக்கு பல நன்மைகளைக் கொடுக்க எப்பொழுதும் ஆயத்தமாகவே உள்ளதென்றாலும், அரசியல் ரீதியாக ஒரு தீர்வைக் கொடுக்க மறுக்கின்றது என்பதே தன்னுடைய தனிப்பட்ட கருத்து எனவும் அவர் விபரித்துள்ளார்.

ஆகவே எமது 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த செயலணி கூட்டங்களில் பங்குபற்றாது ‘அரசியல் தீர்வு முதலில் பொருளாதார முன்னேற்றம் அதன் பின்னர்’ எனக் கூறுவதே உசிதம் என்று தான் கருதுவதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள் சுமார் 12 பேரும் அவர்களுடைய செயலாளர்களும் இன்னும் சிலரும் படையினரில் உயரதிகாரிகளுந் தான் குறித்த செயலணியில் அங்கம் வகிக்கின்றார்கள் எனவும், இவ்வாறான கூட்டங்களில் படையினருக்கு என்ன பங்கு என்று தான் கேட்டிருப்பதாகவும், இது குறித்து தங்களது கருத்தை அறியத்தருமாறும் இரா சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில் வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *