மாகாண சபைகளின் வசமுள்ள பாடசாலைகள், மத்திய அரசினால் பொறுப்பேற்கப்படுவது ஜனநாயக விரோதமானது என்றும், இவ்வாறான செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்றும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருக்கு, சி.வி.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
“யாழ்ப்பாண மாவட்டத்தின் பத்து பிரதான பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.
அவை வடக்கு மாகாண சபை நிர்வாகத்தில் இருந்து மத்திய கல்வி அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மாகாண சபைகளுக்கு கையளிக்கப்பட்ட விடயம் என்ற ரீதியில், இந்தப் பத்துப் பாடசாலைகளை, மத்திய அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாண சபை இயங்கிய காலத்தில், இவ்வாறான முயற்சிகள் யாவும் நிராகரிக்கப்பட்டிருந்தன.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த மாகாண சபை அதிகாரத்தை பிடுங்கி மத்திக்கு கொண்டு செல்லுதல் அதிகாரப்பகிர்வை முழுமையாக மீறும் செயற்பாடாகும்.
இந்தச் செயற்பாடு ஏனைய பாடசாலை மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். இவ்வாறான பாகுபாடு ஆரோக்கியமானதல்ல.” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.