முக்கிய செய்திகள்

வடமாகாணத்தில் இராணுவத்தினர் காணிகளை கபளீகரம் செய்வது தொடர்பில் விவாதம்

988

வடமாகாணத்தில் இராணுவத்தினர் காணிகளை கபளீகரம் செய்வது தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நிலையில், அதில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், பொது மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இராணுவம் வசமிருக்கும் 617 ஏக்கர் காணியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ள அவர், இது பொது மக்களின் காணி என்பதையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

அபிவிருத்திக்கென காணிகள் பெறப்பட்டால் அதனை தாங்கள்ங்கள் எதிர்க்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ள சிவமோகன், மாறாக வட்டுவாகல் பிரதேசத்தில் பொது மக்களின் காணிகள் கைப்பற்றப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் முள்ளிவாய்க்காலில் இராணுவத்திற்கு புறம்பான காணி இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ள அவர், மக்களின் காணிகள் அனைத்தையும் இராணுவம் பெற்றுக்கொள்வதே பிரச்சினைக்குரிய விடயமாக உள்ளது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் இந்த உரையின் போது,முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா குறுக்கீடு செய்தமையால், இந்த விவகாரம் தொடர்பில் இருவருக்கும் இடையில் இன்று கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றிற்கும் இராணுவத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும், அனைத்து தோல்விகளுக்கும் இராணுவத்தை காரணம் காட்டுவதாகவும் சரத் பொன்சேகா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

அத்துடன் நாட்டில் அபிவிருத்தி வரும்போது இராணுவமும் அபிவிருத்தி செய்யப்படும் என்றும், அதனால் பாரிய காணிகள் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் மட்டுமன்றி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்த சரத் பொன்சேகா, இராணுவம் வடக்கிலிருந்து வெளியேற வேண்டுமென கூற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *