முக்கிய செய்திகள்

வடமாகாண கல்வி செயற்பாடுகளில் இராணுவம் தலையிட முயல்வது ஒரு நிர்வாக அராஜகம் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

475

வடக்கு கல்வி செயற்பாடுகளில் இராணுவம் தலையிட முயல்வது ஒரு நிர்வாக அராஜகம் எனவும், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் அரசாங்கம் அதிகளவிலான இராணுவத்தை குவித்து வைத்துள்ளது எனவும், இராணுவத்தினருக்கு வடக்கில் எந்தவிதமான வேலைகளும் இல்லை என்றும் தெரிவித்துளள அவர், இலஙகை மத்திய அமைச்சர்களே வடக்கில் எந்தவிதமான அச்சுறுத்தல்களும் கிடையாது என்று கூறுகிற நிலையில், இவ்வளவு தொகையான இராணுவத்தை வடக்கில் வைத்திருக்க வேண்டிய தேவை கிடையாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கில் உள்ள இராணுவத்தை 9 ஆக பிரித்து 9 மாகாணங்களுக்கு கொண்டு செல்லுமாறு ஏற்கனவே முதலமைச்ர் கூறியிருக்கிற போதிலும், இராணுவத்திற்கு வேலை இல்லை என்று அவர்களை சிவில் நிர்வாகத்தில் தலையிட தூண்டிக் கொண்டிருக்கிறார்கள் எனவும், இது ஒரு நல்ல விடயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பாகிஸ்தானோ அல்லது ஆப்கானிஸ்தானோ இல்லை எனவும், ஆகவே இராணுவத்தினர் இராணுவத்திற்குரிய கடமைகளை மட்டும் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர், இலங்கைக்கு இன்னொரு நாட்டுடன் சண்டையோ அல்லது எல்லைப் பிரச்சினையோ கிடையாது என்ற நிலையில், நாட்டிக்குள் இராணுவம் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

வட புலத்தின் கல்வி நடவடிக்கைகளில் புகுவதற்கு இராணுவத்தினர் தொடரந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர், வடமாகாண பாடசாலை செயற்பாடுகளில் கல்வி அமைச்சு தவிர்ந்த வேறு அமைச்சுக்களினது செயற்பாடுகள் கல்வி அமைச்சரது அல்லது அமைச்சின் செயலாளரது அனுமதியுடனயே இடம்பெற வேண்டும் என்பதே வடமாகாண கல்வி அமைச்சின் நிலைப்பாடு எனவும் விபரித்துள்ளார்.

அந்த வகையில் வடமாகாண கல்வி அமைச்சின் கட்டமைப்பில் உள்ள அதிகாரிகள் தவிர்ந்த வேறு அமைச்சுக்களினதோ, இராணுவத்தினரோ செயற்பாடுகள் கல்வி அமைச்சின் அல்லது செயலாளரின் அனுமதி இன்றி இடம்பெற முடியாது எனவும், சிறிலங்கா இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு பாடசாலைகளில் அனுமதி வழங்க முடியாது என்றும் வடமாகாண கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *