முக்கிய செய்திகள்

வடமாகாண முதலமைச்சர் கட்டுபபாடுகளை விதித்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கிளிநொச்சியில் இருந்து விபரங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது

406

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதிக் காலப் பகுதியில் பிறந்த குழந்தைகளின் விவரத்தைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்த விவரங்களை வழங்கவேண்டாம் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியிருந்த நிலையில், அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத்தூவி இந்த விவரங்களைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் காவல்துறையினர் பெற்றுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

ஒட்டுசுட்டானில் கிளைமோர் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் காவல்துறையினர் தேடி வருவதாகவும், சந்தேகநபரின் மனைவி மே மாதம் 25ஆம் நாள் தொடக்கம் 31ஆம் நாளுக்கு இடைப்பட்ட காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் குழந்தை பிரசவித்துள்ளதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் குறித்த காலப் பகுதிக்குள் குழந்தை பிரசவித்தவர்களின் விவரங்களை வழங்குமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கோரியிருந்த நிலையில், இவ்வாறான தகவல்களை மாவட்ட வைத்தியசாலைகளில் பெற்றுக் கொள்ள முடியாது என்றும், மாகாண பணிமனையுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 35 ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்தும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் காவல்துறையினர் உத்தியோகபற்றற்ற முறையில் தமக்குத் தேவையான தகவல்களைத் திரட்டியுள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *