முக்கிய செய்திகள்

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

632

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம், கொழும்பில் இருந்து சென்ற குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்ட பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல் நிலையத்தில் வைத்து விஜயகலா மகேஸ்வரனின் நிகழ்வில் கலந்துகொண்ட பலரிடம் இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முதல் கட்டமாக விஜயகலா மகேஸ்வரனின் நிகழ்வில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இதனையடுத்து இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அரச உத்தியோகத்தர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்த மீண்டும் தமிழீழ விடுதலை புலிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையின் உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவரத்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோர் முன்னிலையில் விஜயகலா மகேஸ்வரன் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்ததுடன், விஜயகலா இந்த கருத்தை வெளியிடும் போது இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்திருந்தனர்.

விஜயகலா மகேஸ்வரனின் இந்தக் கருத்து தென்னிலங்கையிலுள்ள சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்திருந்ததுடன், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் விஜயகலா மகேஸ்வரனின் கருத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டு, அவரின் அமைச்சுப் பதவியும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

இதனடிப்படையில் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து விஜயகலா மகேஸ்வரன் தாமாக விலகியுள்ள நிலையில், அவரை கைதுசெய்ய வேண்டும் என்று கடும்போக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்ற நிலையிலேயே விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பலரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை விஜயகலா மகேஸ்வரனின் இநத் உரை தொடர்பில், உரை நிகழ்த்தப்பட்டபேர்து அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை நடாத்துவத்றகும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பங்குகொண்டிருந்த அமைச்சர் வஜிர அபேகுணவர்தனவிடம் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *