முக்கிய செய்திகள்

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஒதுங்கிக்கொண்டதாக இணையதளங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை

680

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஒதுங்கிக்கொண்டதாக இணையதளங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என்று மாவை சேனாதிராஜா தனக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இடம் வழங்கப்படமாட்டாது என்று அந்தக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு கோரினால் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கத் தயார் என்றும், கடந்த தடவை முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் விட்டுக்கொடுத்து தவறிழைத்ததைப் போன்று இம்முறை தவறிழைக்க மாட்டேன் என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில், சில இணையதளங்களில் இவ்விவகாரம் தொடர்பில் வெளியான செய்திகளில், அடுத்த முதலமைச்சர் வேட்பாளரிலிருந்து ஒதுங்குவது கட்சிக்கு நல்லதெனில் தன்னை நினைத்து சங்கடப்படத் தேவையில்லை எனவும், தான் ஒதுங்கிக்கொள்கிறேன் என்ற முடிவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி தொடர்பில் மாவை சேனாதிராஜாவின் வீட்டுக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வினவியபோது, அந்தச் செய்தியை முற்றாக மறுத்துள்ள மாவை சேனாதிராஜா, அப்படி ஒன்றும் கூறவேயில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *