வட மாகாண காணி ஆவணங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன

44

தமிழ்க் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், வட மாகாண காணி ஆவணங்கள் நேற்று இரவு இரகசியமான முறையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

வடமாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணியகத்தை, அனுராதபுரத்துக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், காணி ஆவணங்கள் நேற்று இரவு மின்வெட்டு நேரத்தில் இரகசியமான முறையில்,  அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரச காணிகளை தனியாருக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், இந்த திடீர் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா போன்ற பகுதிகளில் உள்ள அரச காணிகளை சிங்களவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நோக்கிலேயே வடக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணியகத்தை அனுராதபுரத்துக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு எதிராக தமிழ் அரசியல் கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன், அரசாங்கத்திடம் எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தனர்.

அமைச்சர் சந்திரசேனவுடன் பேச்சு நடத்தி, வடக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணியகத்தை அனுராதபுரத்துக்கு மாற்றும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்த நிலையிலேயே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாகாணத்தில் நேற்று மாலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை திடீர் மின்தடை ஏற்பட்டிருந்த நேரத்திலேயே காணி ஆவணங்கள் அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால், இதற்காகவே மின்சாரம் தடைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *