வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

259

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டதுஅதன்படி ரூ. 1000 ரொக்கப் பணம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீள கரும்பு ஆகியவற்றுடன் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் ரே‌சன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 7-ந்தேதி தொடங்கிய இந்தப்பணி இன்று 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. ரே‌சன் கடைகளில் மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் வந்து ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், ரூ.1000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. கோவையை சேர்ந்த டேனியல் இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு, அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் வருமானம் உள்ளிட்ட எந்த ஒரு பாகுபாடின்றி, ரூ.1000 பணத்தை பொங்கல் பரிசாக வழங்குகிறது.

ஏற்கனவே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை முடிக்காத நிலையிலும், அதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படும் சூழ்நிலையிலும், இது போல அனைத்து ரே‌சன் கார்டுகளுக்கும் ரொக்கப்பரிசு வழங்கினால், அது தேவையில்லாத நிதி சுமையை அரசுக்கு ஏற்படுத்தும்.

நலத்திட்டங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கலாம். அதுகூட பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட வேண்டும். அதற்காக அனைவருக்கும் ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்குவதை ஏற்க முடியாது.

மேலும், தமிழக அரசுக்கு வரி உள்ளிட்ட பிற வகைகளில் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 616 கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால், செலவு உள்ளிட்டவை ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடியாக உள்ளது.

இதுபோக தமிழக அரசு ரூ.43 ஆயிரத்து 962 கோடி கடன் வாங்கியுள்ளது. எனவே, அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்க தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜ மாணிக்கம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழக அரசு, அரசியல் லாபத்துக்காக இதுபோல அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கவேண்டும்’ என்றார்.

ஏழை, பணக்காரர் என்று வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படுவதை ஏற்க முடியாது.

அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்கப்படுகிறது. அதே நேரம், வறுமைக்கோட்டிற்கு கீழ்உள்ள ரே‌சன் அட்டைத்தாரர்களுக்கு இந்த தொகையை அரசு தொடர்ந்து வழங்கலாம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்பத்துக்கும் ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதில் ஐகோர்ட்டு தலையிட முடியாது என்று கூற முடியாது. கொள்கை முடிவு எடுத்தாலும் எதற்காக அனைருக்கும் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது? இதற்கு என்ன காரணம்? அரசின் நோக்கம்தான் என்ன?

ஆளும் கட்சியின் நிதியில் இருந்து இதுபோல ரூ.1000 ரொக்கப்பரிசு பொங்கலுக்கு வழங்கினால் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். அப்படி தாராளமாக பணத்தை வழங்கலாம். ஆனால், அரசின் நிதியில் இருந்து பணத்தை கொடுத்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கேள்வி எழத்தான் செய்யும்.

ஏன் என்றால், இது பொதுமக்களின் வரிப்பணம். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் இந்த வரிப் பணத்தை அரசு விருப்பம் போல் செலவு செய்ய முடியாது. பணக்காரர்கள், ஏழைகள் என்று வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் ரொக்கப்பரிசு என்பதை ஏற்க முடியாது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரொக்கப்பரிசை அரசு வழங்கலாம். அதற்காக பணக்காரர்களுக்கு இந்த பரிசு எப்படி வழங்க முடியும்? ரூ.1000 தவிர மற்ற பரிசு பொருட்களை அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் வழங்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்..
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *