முக்கிய செய்திகள்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக வழக்கு

51

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ்,  நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனவும் குற்றம்சாட்டப்பட்ட வழக்குகள் எதிர்வரும் புதன்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இந்த வழக்குகளுக்கான அழைப்பாணைகள் தவிசாளார் தியாகராஜா நிரோஷிடம் அச்சுவேலி காவல்துறையினரால் வழங்கப்பட்டுள்ளன.

நிலாவரை கிணற்றுப் பகுதியில் தொல்லியல் திணைக்களமும் இராணுவமும் இணைந்து இரண்டு தடவைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த அகழ்வுப் பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டதையடுத்து மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தவிசாளரே காரணம் எனவும் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் எனவும் அச்சுவேலி காவல் நிலையத்தில் தொல்லியல் திணைக்களத்தினர் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இந்நிலையில் தவிசாளர் தியாகராஜா நிரோஷுக்கும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நளின் வீரரத்தினவுக்கும் இடையில் மல்லாகம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், அச்சுவேலி காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளடங்கியோரால் இருதரப்பு சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தவிசாளர், தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளவுள்ள முயற்சிகள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கு முகமாக தமக்கு உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்துவதுடன், மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும் என விட்டுக்கொடுப்பின்றி வலியுறுத்திய நிலையில், தொடர்ந்து தவிசாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

பின்னர் தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில்,தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் பிரதேச சபை , பிரதேச செயலகம் போன்றவற்றிற்கு அறிவித்து மாவட்ட அபிவிருத்திக்குழுக்களின் அனுமதி பெற்றே நிலாவரை மற்றும் உருத்திரபுரம் பகுதியில் செயற்படும் என அமைச்சர் அறிவித்திருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் புதன் கிழமை மத்திய அரசாங்கத்தின் தாபனங்களான தொல்லியல் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்ற மத்திய அரசின் ஸ்தாபனங்கள் உள்ளூராட்சி மன்ற அதிகாரத்தை தவிசாளர் பிரயோகித்தமைக்காக அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *