வவுனியா மொத்த வியாபார மரக்கறி சந்தையை திறக்க சிறிலங்கா காவல்துறையினர் அனுமதிக்காததால், வியாபாரிகள் இன்று வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹொவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வவுனியா தினச்சந்தை கொரோனோ அச்சுறுத்தலை அடுத்து, கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்தது.
வியாபாரிகள் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில், தொற்று நீக்கம் செய்து மீண்டும் சந்தையை திறப்பதற்கு சுகாதார பிரிவினர் அனுமதி வழங்கியிருந்தனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை வர்த்தகர்கள் சென்ற போது, காவல்துறையினர் சந்தையை திறக்க அனுமதி வழங்கவில்லை.
இதையடுத்து, ஹொறவொத்தானை பிரதான வீதியை வழிமறித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், 6 மணி நேரமாக போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் காவல்துறை மா அதிபர் லால் செனவிரத்தின ஆகியோர் அவர்களுடன் கலந்துரையாடி, திங்கட்கிழமை முதல் சந்தையை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.