முக்கிய செய்திகள்

வாகனப் பேரணிக்கு கனடிய தேசிய அவை பூரண ஆதரவு

70

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு நடைபவனிப் போராட்டதிற்கு கனடியத் தமிழர்களின் முழுமையான ஆதரவினை வழங்குவதாக கனடியத் தமிழர் தேசிய அவை அறிவித்துள்ளது.

எமது தாயகத்தில் இடம் பெற்றுக்   கொண்டிருக்கும்   பொத்துவில் முதல் பொலிகண்டி வரை அமைதி வழிப் போராட்டமானது, எமது உறவுகளால் மிக  நீண்ட கவனயீர்ப்பு  நடைப் பயணமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதை  நாம்  அனைவரும் அறிவோம்.

அத்துடன் இன்றைய காலச் சூழலில், பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் சொல்லவொண்ணாத் துயரங்களைச் சுமந்து வாழும் எமது மக்கள், தொடர்ச்சியாக அனுபவித்து வரும் சிறிலங்கா அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராகப் பெருமளவில் கிளர்ந்துள்ளார்கள் என்பதை இந்த அமைதி வழிப் போராட்டமானது உலகுக்கு  உணர்த்தி நிற்கின்றது.

நோய்த் தொற்றுக் காலச் சூழல், சீரற்ற காலநிலை, அடக்குமுறை வாழ்வு, எல்லாவற்றையும்  தாண்டி, எமது நிலம்  எமக்கு  வேண்டும் என்ற  தாயகம்  சார்ந்த  கோட்பாட்டில்  இணைந்து ஒருமித்து எமது மக்கள் எழுப்பும் குரல் நிகழ்காலத்  தாயகத்தின் நிதர்சனம் என்பதை நாம் அனைவரும்  உணர்வோம்.

இந்தக் கவனயீர்ப்பு நடைப்பயண அமைதி வழிப் போராட்டமானது, மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை எமக்கு நம்பிக்கையையும், உறுதியையும்   தருகின்றது.  

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஒழுங்கமைத்து போராட்டத்தைப் நடாத்துபவர்கள், உணவு, தங்குமிடம், ஊர்தி வசதி என்று பக்க பலமாக நிற்கும் எமது உறவுகள், மிக நீண்ட நடைப் பயணத்தில் பங்கு கொள்பவர்கள், பல்வேறு வகைகளிலும் தொடர்ச்சியாக ஒத்துழைப்பவர்கள் அனைவருக்கும் கனடியத் தமிழர் தேசிய அவை, கனடா வாழ் ஈழத் தமிழ் மக்கள் சார்பாக எமது நன்றியைத்  தெரிவித்துக் கொள்கின்றது

அனைவரதும் அசைக்க முடியாத உறுதி எங்களுக்குத் தொடர்ந்து தாயகம் சார்ந்து செயற்படுவதற்கான புதிய உத்வேகத்தைத் தருகின்றது. ஈழத்தில் முன்னெடுக்கும் இத்தகைய போராட்டங்கள் அனைத்துக்கும் உறு துணையாகக் கனடா வாழ் ஈழத் தமிழ் மக்களாகிய நாம் இணைந்து நின்று பணியாற்றுவோம் என்றும் உறுதி கூறுகின்றோம்.

நிலத்திலும், புலத்திலும் தமிழ்த் தேசிய இனமாக தொடர்ந்து ஒன்று பட்டு நின்று போராடுவோம் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *