வாகரையில் ஊர்காவல் படையினருக்கு காணி வழங்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது

275

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் ஊர்காவல் படையினருக்கு காணி வழங்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வாகரை பிரதேச செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மாங்கன்று நடுவதற்காக ஊர்காவல் துறையினர் 25 ஏக்கர் காணி கோரி விண்ணப்பித்துள்ளதாக அறிவதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் மாகாண காணி ஆணையாளரின் ஆலோசனையில் இடம்பெறுகிறது எனவும், எனினும் ஊர்காவல் படையினருக்கு இங்கு காணி வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அவர்களுக்க காணி தேவை எனில் அவர்கள் அதனைப் பொலன்னறுவை மாவட்டத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும், எதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்கள் காணி கோரவேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு ஊர்காவல் படையினருக்கு இப்போது மரம் நடுகைதான் தொழிலா என்று சந்தேகிக்க தோன்றுகின்றது தெரிவித்துள்ள அவர், உண்மையில் இதில் ஏதோ ஒரு இன ரீதியான திட்டம் அமைந்துள்ளது என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பலர் காணி இன்றி கஸ்டப்படும் நிலையில், இவர்களுக்கு காணி வழங்க முடியாது எனவும், ஆகவே பிரதேச செயலகம் இதற்கு காணி வழங்கும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *