வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தும் பெயரில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வாள் வெட்டுக் குழுக்களுக்கும் சாவகச்சேரி காவல் நிலைய சிப்பாய்களுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது

424

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அண்மைக்கால வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட நிலையில், அங்கு கருத்து வெளியிடும்போதே காவல்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தென்மராட்சியின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த 7 இளைஞர்கள் மானிப்பாயில் உள்ள காவல்துறையினரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்று சுமார் 40 இற்கும் மேற்பட்டோர் அந்தக் காவல் நிலையத்தில் பதைபதைப்புடன் திரண்டுள்ளனர்.

வாள்வெட்டுக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 7 பேரும் மானிப்பாயில் உள்ள காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்து வருகின்ற நிலையில், அந்தக் காவல் நிலையத்தின் முன்பாக, கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்று சுமார் 40பேர் வரையில் திரண்டிருந்தனர்.

எனது மகனுக்கும் இந்தச் சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கைதான இளைஞன் ஒருவனின் தந்தை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ள நிலையில், அங்கு திரண்டிருந்த உறவினர்கள் பலரும், கைதானவர்களுக்கு குற்றச் செயல்களுடன் தொடர்பு இல்லை என்றும், அவர்களை விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை வாள் வெட்டுக்குழுக்களுக்கும், சாவகச்சேரி காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவற்துறை சிப்பாய்கள் சிலருக்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட தென்மராட்சி பகுதியை சேர்ந்த 07 இளைஞர்களில், மூவருக்கு எதிராக வாள் வெட்டு தொடர்பிலான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் , மேலும் ஒன்பது பேரை தாம் தேடி வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்படவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் சாவகச்சேரி காவல் நிலையத்தில் கடமையாற்றும் சில காவற்துறையினருக்கும் , கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாகவும், அதனடிப்டையில் இளைஞர்களின் கையடக்க தொலைபேசி அழைப்புகள் குறித்து விசரானைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *