முக்கிய செய்திகள்

விக்னேஸ்வரனின் கருத்துக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல – இந்துமாமன்றம்.

1288

கடந்த மாதம் 24ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியின்போது, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய கருத்துக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல என்று அகில இலங்கை இந்துமாமன்றம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையைத் தவறாக எடுத்துக்காட்டி, தெற்கிலுள்ள சில அரசியல்வாதிகளும் மதத்தலைவர்களும் இனத்துவேச அடிப்படையில் ஊடகங்கள் வாயிலாக அறிக்கைகளை விடுவதையிட்டு தமது வன்மையான கண்டனத்தையும், கவலையையும் வெளிப்படுத்துவதாக, அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
indu-mamanram

இலங்கையில் 2015ஆம் ஆண்டு சனவரி 08ஆம் நாள் நல்லாட்சி ஏற்படுத்துவதற்கு தமிழ் பேசும் மக்களால் அளிக்கப்பட்ட காத்திரமான ஆதரவையும் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உரைகளில் அடிக்கடி நினைவுபடுத்துகின்ற போதிலும், இதனை மறந்து அல்லது மறைத்து சில துவேசமான அரசியல்வாதிகளும் சில மதத்தலைவர்களும் முதலமைச்சரின் உரையை தமிழ் பேசும் மக்களுக்கெதிராக இனத்துவேச அடிப்படையில் ஊடகங்களூடாக கொண்டுசெல்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் முதலமைச்சரின் உரையின் பொருளடக்கத்தைச் சரியான முறையில் அணுகி அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அதாவது வடமாகாண முதலமைச்சர் தனது மாகாண மக்களின் உணர்வுகளையே எடுத்துக் கூறியுள்ளார் என்பதனை பத்திரிகை மூலம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சேபிக்கும் சிலர் தலைப்புகளைமட்டும் வாசித்துவிட்டு முதலமைச்சரின் உரை முழுவதையும் வாசிக்கவில்லை என்பதனையும் ஓர் பத்திரிகையாளர் சரியாக எடுத்துக் காட்டியிருப்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள மக்களுக்கு எதிராகவோ, பௌத்த மக்களுக்கோ ஏனைய இனங்கள், மதங்களுக்கு எதிராகவோ தான் செயற்படவில்லை என்பதனை முதலமைச்சர் தெளிவாக கூறியுள்ள நிலையில், முதலமைச்சரை ஓர் இனவாதி என்ற கோணத்தில் இழிவுபடுத்துவது, மிகவும் பாவமான காரியமென்றே தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பை சிறுபான்மை மக்கள் மீது திணிக்கவேண்டும் என பெரும்பான்மை மக்கள் கருதக்கூடாது எனவும், அது உண்மையான சனநாயகமாகாது என்றும் தெரிவித்துள்ள அவர், தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கு காலந்தாழ்த்தப்பட்டாலும், இப்போதாவது ஒரு விடிவு கிடைக்கப்பெறும் நேரத்தில், இனவாதிகள் இதனைச் சிதைப்பதை தயவு செய்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி்யுள்ளார்.

புத்தர் பெருமானின் போதனைகளைப் பரப்புகிறோம் எனக்கூறும் ஒரு நிறுவனம், சகல தமிழர்களையும் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் எனக்கூச்சலெழுப்புவது, தங்களுக்கு வேதனையைத் தருவதாகவும் தெரிவித்துள்ள அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர், பொறுப்புவாய்ந்த அரசியல் தலைவர்களும், மதத்தலைவர்களும் சமஷ்டியின் உண்மையான தன்மையை பொது மக்களுக்கு எடுத்துக் கூறவேண்டும் எனவும், அது அவர்களின் தார்மீகக் கடமையுமாகும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *