ஈஸ்டர் தாக்குதலுடன் எனக்கு தொடர்புள்ளதாக கருத்து வெளியிட்ட விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஈஸ்டர் தாக்குதலுடன் அசாத் சாலி, றிஷாட் பதியுதீன் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகிய மூவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் தொடர்பில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிட்ட அறிக்கையில் எந்தவொரு விடயங்களும் குறிப்பிடப்படவில்லை என குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த நிலையில், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு என்னைப்பற்றி கருத்து வெளியிட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதலுடன் என்னை தொடர்புபடுத்தி அவர் கூறிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவையாகும்.
உண்மையில் அவர் இது தொடர்பில் அறிந்திருந்தால் ஊடகங்களுக்கு தெரிவிப்பதை விடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவில் தெரிவித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திருக்க முடியும். எனினும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர் இதற்கு முரணான கருத்துக்களையே முன்வைத்திருந்தார்.
தற்போது என்னுடைய நற்பெயருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். எனவே அவருக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றார்.