முக்கிய செய்திகள்

விஜய் சேதுபதியுடன் கலக்க வரும் டி.ஆர்!

1786

ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தனி ஒருவன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கே.வி.அனந்த் இயக்கத்தில் தன் அடுத்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இதுவரை பெயரிடப்படாத இத்திரைப்படத்துக்கு சில தலைப்புகளைக் குறிப்பிட்டு சரியான தலைப்பை யூகிக்கச் சொல்லி ட்விட்டர் மூலம் இயக்குநர் அறிவித்திருந்தார்.

இப்போது படத்தின் தலைப்பு “கவண்” என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. ‘கவண்’ என்பது தூய தமிழ்ச் சொல். மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டபோது, அவன் தயாரித்த முதல் விசைக்கருவி, ‘கவண்’ என்று கருதப்படுகிறது. இலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாகப் பயன்பட்ட கவண் பற்றி தமிழ் இலக்கிய நூல்களிலும் குறிப்புகள் உள்ளன.விசை வில்பொறி (catapult),கல்லெறி கருவி (sling) என்று இலக்கியத்திலும், உண்டிக்கோல் என்று வழக்குதமிழிலும் அழைக்கப்படுகிறது என்று தலைப்பை பற்றி சொல்கிறார் கே.வி.ஆனந்த்.
மாற்றான், அநேகன் படங்களை அடுத்து, கே.வி. ஆனந்த், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தொடர்ந்து இயக்கும் மூன்றாவது திரைப்படம் இது. பெரும் பொருட்செலவில் மிக பிரமாண்டமான செட்கள் அமைத்து, திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி, நாயகனாக பங்கேற்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, டி.ராஜேந்தர் வெள்ளித்திரையில் தனக்கே உரிய பிரத்தியேக முத்திரையை மீண்டும் அழுத்தமாகப் பதிக்கிறார். மடோனா செபாஸ்டின், விக்ராந்த், பாண்டிய ராஜன், நாசர், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பது இதுவே முதன்முறை. குறிப்பாக டி.ராஜேந்தரும், ஹிப் ஹாப் தமிழாவும், கதாநாயகி மடோனாவும் இணைந்து பாடியிருக்கும் புது வருடப்பாடல் இனி ஒவ்வொரு நியூ இயருக்கும் தவறாமல் ஒலிக்கும் என்று சொல்கிறார் இசையமைப்பாளார் ஹிப் ஹாப் தமிழா. கே.வி. ஆனந்துடன் இணைந்து படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை இரட்டை எழுத்தாளர்கள் சுபா, மற்றும் கபிலன் வைரமுத்து அமைத்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. அடுத்த மாதம் பாடல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *