முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

விடுதலைப் புலிகளது காலத்தில் தமிழ் மக்களுக்கு வலுவானதொரு அரசியல் தலைமைத்துவம் இருந்தது.

1187

தமிழீழ விடுதலைப் புலிகளது காலத்தில் தமிழ் மக்களுக்கு வலுவானதொரு அரசியல் தலைமைத்துவம் இருந்தது எனவும், இன்று அத்தகைய பலம் வாய்ந்த, தமிழ்மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தலைமை இல்லாத நிலையில், அரசியல்ரீதியாக நாங்கள் அங்கவீனர்களாக உள்ளோம் என்றும் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கருவி அமைப்பால் நேற்று சனிக்கிழமை அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் நாள் கொண்டாடப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

காது கேட்காதவர்களையும், கண்பார்வை இல்லாதவர்களையும், வாய் பேச முடியாதவர்களையும், உறுப்புகளை இழந்தவர்களையும் நாங்கள் அங்கவீனர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் என்கின்ற போதிலும், இந்தக்குறைபாடுகளை நினைத்து எவரும் அவநம்பிக்கை கொள்ளக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுளளார்.

நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் இவற்றைவெல்ல முடியும் எனவும், ஒரு புலனை அல்லது ஒரு உறுப்பை இழந்தாலும், மற்றைய உறுப்புகளுக்குக் கூடுதல் திறனோடு இயங்கக் கூடிய ஆற்றலை இயற்கை அன்னை கொடுத்திருக்கும் நிலையில், அந்தத் திறனை அடையாளம்கண்டு, மாற்றுத் திறனாக அதனை விருத்தி செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் தங்கள் தன்னம்பிக்கையை ஊன்றி நிமிர்ந்தெழுவதற்குத் தேவையான பொருளாதார அடித்தளத்தினை அமைத்துத்தர வேண்டிய பொறுப்பு வடமாகாண சபைக்கு உள்ள போதிலும், மாகாணசபையே அங்கவீனமாகத்தான் உள்ளது எனவும், தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வாக முன்வைக்கப்பட்டிருக்கும் மாகாணசபைக்கு முழுமையான அதிகாரங்கள் இல்லை என்ற நிலையில், குறைப்பிரசவமான இதனை வைத்துக்கொண்டு தங்களால் நிறைவாகச் செயற்பட முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைகள் மாத்திரம் அன்றி அரசியல் வாதிகளான தாமும் சகல புலன்களும் இயங்கப்பெற்றும் அங்கவீனர்களாகத்தான் இருப்பதாகவும், போருக்குப் என்னர் எங்களது உரிமைகள் தொடர்பில் உரத்துப்பேசுவதற்கு நாம் தயாராக இல்லை எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அவ்வாறு பேசினால் அரசு கோபித்துக் கொள்ளுமோ, சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவார்களோ என்று மௌனிகளாக இருப்பதாகவும், அடுத்த தேர்தலுக்கு ஆசனம் தராமல் விட்டு விடுவார்களோ என்ற பயத்தில், ஆக்க பூர்வமான விமர்சனங்களைக்கூட கட்சித்தலைமைகளிடம் தாம் சொல்லுவதற்குத் தயங்குவதாகவும் தெரிவித்துள்ள அவர், இதுதான் விடுதலை அரசியலுக்குப் பின்னரான இன்றைய தேர்தல்அரசியலின் யதார்த்தம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *