விடுதலைப் புலிகளின் தளபதிகள் பலர் சரணடைந்த பின் கொல்லப்பட்டனர் என்று எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்

795

போரின் முடிவில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேஷ் உள்ளிட்ட பலர் பின்னர் கொல்லப்பட்டனர் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவிகளை விட்டு விலகிய 15 பேர் அணியின் ஊடக சந்திப்பொன்றில் அவர் இந்தக் கருத்துக்களை வௌியிட்டுள்ள நிலையில் அது தொடர்பான காணொளியுடன் செய்தியொன்றை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், விடுதலைப் புலிகளின் கேணல் ரமேஷ் தனது நெருங்கிய நண்பர் எனவும், அவர் ராணுவத்தினரிடம் சரணடைய பத்துநிமிடம் முன்னதாக தனக்கு குறுஞ்செய்தியொன்றை அனுப்பியிருந்தார் எனவும், பின்னர் அவர் கொல்லப்பட்டிருந்தார் என்றும் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று ஏராளம் பேர் சரணடைந்தனர் எனவும், அவர்களில் பலர் கொல்லப்பட்டனர் என்றும், இந்த வரலாறு உங்களுக்கும் தெரியும் – எனக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் ராணுவத் தளபதியும் இந்நாள் அமைச்சருமான சரத் பொன்சேகாவை சிக்கலில் மாட்டி விடும் நோக்கிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌சவுக்கு எதிராக போர்க்குற்றங்கள் தொடர்பான சில விடயங்களை கசிய விடுவதற்கு சரத் பொன்சேகா தரப்பும் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *