முக்கிய செய்திகள்

விரைவில் வருவேன்! நன்றாக விளையாட முடியும்! லசித் மலிங்க

1259

காயம் காரணமாக இலங்கை அணியில் இருந்து விலகியிருந்தார் லசித் மலிங்க. தற்போது பரிபூரண குணம் பெற்று வருகிறார்.

பொதுவாக எதிரணி கிரிக்கெட் வீரரகள், அணிக்குள் நிலவும் அரசியல், ஸ்லெட்ஜிங் என எதைப்பற்றியும் விமர்சிக்க மாட்டார் மலிங்க.

இந்நிலையில் சிலோன் டுடே நாளிதழுக்கு மனம் திறந்த பேட்டி ஒன்றை சமீபத்தில் அளித்திருந்தார். அதில் சில துளிகள்:-

காயம் இப்போதைக்கு வேகமாக ஆறி வருகிறது. நெட்டில் பவுலிங் செய்ய ஆரம்பித்து விட்டேன். விரைவில் அணிக்குள் வருவேன் என நினைக்கிறேன்.

என்னுடைய உடல் தகுதியை வைத்து பார்க்கும்போது இன்னும் 2-3 ஆண்டுகள் நன்றாக விளையாட முடியும் என நினைக்கிறேன் என பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் நடத்த டி-20 தொடரில் இலங்கையை அவுஸ்திரேலியா எளிதாக பந்தாடியது குறித்த கேள்விக்கு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் மலிங்க.

அணியில் உள்ள வீரர்களை குறை சொல்லிப் பயன் கிடையாது. அவுஸ்திரேலிய அணியை எடுத்துக்கொண்டால் அவர்கள் அணியில் உள்ள பத்து பேராவது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு டி20 லீக் போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்றுள்ளனர்.

டி -20 ஐ பொறுத்தவரை சர்வதேச தரத்திலான வீரர்களுடன் விளையாடி அனுபவம் பெற வேண்டியது அவசியம். அதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் உருப்படியான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

மலிங்கா பொதுவாக பணத்துக்காக ஆடுகிறார், நாட்டுக்காக ஆடுவது இல்லை என்பது போன்ற விமர்சனங்களை பலர் தொடர்ந்து முன் வைத்து வரும் வேளையில் முதன் முறையாக இது குறித்து வாயைத் திறந்திருக்கிறார்.

நான் எப்படி நாட்டுப்பற்றுள்ளவன் என நிரூபிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என தெரியவில்லை.

ஒரு நாள் போட்டிகளை எடுத்துக்கொண்டால் தற்போது அணியில் உள்ள வீரர்களில் அதிக விக்கெட் எடுத்ததே நான் தான்.

மூன்று உலகக்கோப்பை விளையாடியிருக்கிறேன், உலக கோப்பையில் ஹாட்ரிக் எடுத்து பெருமை சேர்த்திருக்கிறேன்.

எனது தலைமையில் இலங்கை அணி டி 20 கோப்பையை ஜெயித்திருக்கிறது,

வேகப்பந்து வீச்சாளர்களில் சமிந்த வாசுக்கு பிறகு இலங்கை அணி சார்பாக விளையாடி அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளதும் நான் தான்.

என் வாழ்க்கையில் இது வரை ஒரு முறை கூட களத்தில் தவறாக நடந்து கொண்டு ஐ.சி.சி யிடம் அபராதம் செலுத்தியது கிடையாது.

ஜென்டில்மேன் கிரிக்கெட்டைத் தான் ஆடியிருக்கிறேன். இதற்கு மேல் நான் என்ன நிரூபிக்க வேண்டும் என தெரியவில்லை என புலம்பியிருக்கிறார்.

கடைசியாக, உங்கள் வாழ்நாளில் உங்களை அச்சுறுத்திய பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு சற்றும் தயங்காமல் பதிலளித்தார்.

நியூசிலாந்து அணியைச் சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம், இந்திய அணியைச் சேர்ந்த விராட் கோஹ்லி ஆகிய இருவரும் கடும் சவால் தந்தனர்.

அதிலும் இலங்கை அணிக்கு எதிராக ஆடிய ஆட்டம் ஒன்றில் 40 ஓவரில் 320 ரன்களை சேர்க்க வேண்டும் என்ற சூழ்நிலையில் விராட் ஆடிய ஆட்டம் மெச்சத்தக்கது.

அந்த போட்டியில் எனது ஒரே ஓவரில் 24 ரன்கள் எடுத்தார். எல்லாருக்கும் அந்த ஒரு ஓவர் ஞாபகம் இருக்கிறது. அதைப் பற்றியே பேசுகிறார்கள், அதைப் பற்றியே எல்லா இடத்திலும் கேள்வி கேட்கிறார்கள், விமர்சிக்கிறார்கள்.

ஆனால் நான் 12 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக ஆடிய ஆட்டத்தை மறந்து விட்டார்கள் என சற்றே கடுப்புடன் சொல்லியிருக்கிறார் மலிங்க.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *