முக்கிய செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் வெடுக்குநாறிமலை ஆலயத்தினர்

162

வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பூசகர் இன்று நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் அவர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி காவல்துறையினர் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருட்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்த வருடம் ஒக்டோபரில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் நவம்பர் ஆறாம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதன்பின்னர், கடந்த நவம்பர் ஆறாம் திகதி ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றில் மீண்டும் ஆஜராகிய நிலையில் கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக அநேகமான வழக்குகள் விசாரணைகளுக்கு அழைக்கப்படாமல் தவணை இடப்பட்டிருந்தது. அந்தவகையில் இவ்வாண்டு தை மாதத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கினை முன்னமே அழைக்குமாறு தொல்பொருட் திணைக்களம் சார்பாக ஆஜராகிய சட்டதரணிகளால் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டது.

எனினும், வழக்கின் திகதி மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக நெடுங்கேணி காவல்துறையினர் தமக்கு தெரியப்படுத்தவில்லை என்று தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றிற்குச் சமூகமளித்திருக்கவில்லை.

இந்நிலையில் அன்றைய தினம் அவர்களது பிணையும் இரத்தாகியிருந்த நிலையில், ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *