முக்கிய செய்திகள்

வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை பல உலக நாடுகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை

72

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை பல உலக நாடுகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என உலக சுகாதார நிறுவனம் (World health organisation) எச்சரித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸால் 3000த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக ஐரோப்பாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தாலி, பிரான்ஸ், கிரீஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

அதன் காரணமாக பல நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விளையாட்டு நிகழ்ச்சிகள், சுற்றுலா, சர்வதேச வணிகம் ஆகியவற்றிக்கு தடை விதிக்கப்படுள்ளது. பல்கலைகழகங்களில் படித்து வந்த சுமார் 30 கோடி மாணவர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் வர்த்தகங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. இதனால் பல உலக நாடுகளின் பொருளாதாரம் சிக்கலில் மாட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான வழிகாட்டிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டிகள் ஆகியவற்றை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் பல நாடுகள் கொரோனா பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேஸெஸ் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் :

கொரோனா வைரஸால் பணக்கார நாடுகள், ஏழை நாடுகள் என அனைத்து நாடுகளுக்கும் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆனால் பல நாடுகள் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல மருத்துவமனைகளில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த நிலை கவலை அளிக்கிறது.

அனைத்து நாடுகளின் அரசாங்கமும் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான பணிகளை வெறும் சுகாதாரத்துறையின் கைகளில் ஒப்படைக்காமல் அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து பணிகளை மேற்கொள்ள ஆயத்தப்படுத்த வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் தேவை என்று டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேஸெஸ் கூறினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *