ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதை நீடிக்கப்படவுள்ள தாக குறிப்பிட்டு ஸ்காபறோ சமஷ்டி லிபரல் நாடாளுமன்றக் குழுவினால் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசரகால தயார்நிலை அமைச்சர் பில் பிளையர் (Bill Blair), ஸ்காபறோ-ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, ஸ்காபறோ வடக்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷோன் சென் (Shaun Chen), ஸ்காபறோ-கில்வுட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்கே (John McKay), ஸ்காபறோ-ஏஜின்கோர்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன் யிப் (Jean Yip), ஸ்காபறோ மத்தி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சல்மா ஸாஹிட் (Salma Zahid) ஆகியோர் இணைந்தே இக்கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதில் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதையைக் கட்டி, நிறைவு செய்வதற்கு 2.26 பில்லியன் டொலர்கள் வரையான பணத்தைச் சமஷ்டி அரசு முதலிடுமென இன்று அறிவித்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்காபறோவில் மேலதிகமாக 7.8 கிலோ மீட்டர் தூரத்திற்குத் தொடருந்துப் பாதை அமைக்கப்படுவதற்கும், TTCs Line 2 (Bloor-Danforth) இல் மேலதிகமாக மூன்று நிறுத்தங்கள் அமைக்கப்படுவதற்கும் இந்த நீடிப்பு வழிவகுக்கும்.
கெனடி ஸ்ரேஷனில் இருந்து கிழக்கு நோக்கி நீடிக்கப்படவுள்ள ஸ்காபறோ நிலக்கீழ் தொடருந்துப் பாதையில் ஸ்காபறோவில் புதிதாக மூன்று நிலக்கீழ் தொடருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் 2015 ஆம் ஆண்டில் இருந்து ஸ்காபறோ சமஷ்டி லிபரல் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்கள் தமது பகுதியில் விரைவுப் பொதுப்போக்குவரத்து மேம்படுத்தப்படுவதற்குக் குரல்கொடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.