முக்கிய செய்திகள்

ஸ்மார்ட்போன்கள் வரிசையில் ‘ஸ்மார்ட் கண்ணாடிகள்’ வந்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?

1363

ஸ்மார்ட்போன்கள் வரிசையில் ‘ஸ்மார்ட் கண்ணாடிகள்’ வந்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? சந்தேகம் எனில் இணையத்தில் ஸ்மார்ட் கண்ணாடிகள் என ஆங்கிலத்தில் தேடிப்பாருங்கள், வரிசையாக ஆண்ட்ராய்டு கண்ணாடிகள் தொடர்பான முடிவுகளாக வந்து நிற்கும்.

எல்லாமே வழக்கமான முகம் பார்க்கும் கண்ணாடியை ‘ராஸ்பெர்ரி பை’ எனும் சின்ன கம்ப்யூட்டர்கள், ஆண்ட்ராய்டு ‘இன்டர்ஃபேஸ்’ தொழில்நுட்பம் கொண்டு ஸ்மார்ட் கண்ணாடியாக மாற்றப்பட்ட‌வை. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் நேரம் பார்க்கலாம், வானிலை அறியலாம். இன்னும் பல விஷயங்களைச் செய்யலாம்.

இப்போது இந்த வரிசையில் ஆப்பிள் கண்ணாடியும் அறிமுகமாயுள்ளது. இந்தக் கண்ணாடி ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு அல்ல. ஆப்பிளின் சமீபத்திய ஐஓஎஸ் 10 இன்டர்ஃபேஸ் கொண்டு ரபேல் டைமெக் என்பவர் உருவாக்கிய ஸ்மார்ட் முகம் பார்க்கும் கண்ணாடி.

பெரிய அளவிலான ஐபோன் அல்லது ஐபேடு தோற்றம் தரும் இந்தக் கண்ணாடியில் இரு பக்கமும் ஐபோனில் பார்க்கக்கூடிய ஐகான்கள் பலவற்றைப் பார்க்கலாம். அந்த ஐகான்களைத் தொட்டு இயக்கவும் செய்யலாம். இந்த ஐகான்கள் மூலம் உபெர் சேவையை அழைக்கலாம். நெட்ஃபிளக்ஸில் படம் பார்க்கலாம். ஃபேஸ்புக் பதிவுகளுக்குப் பதில் போடலாம், குறுஞ்செய்திகளைப் படிக்கலாம், செய்திகளை அறியலாம், வீட்டில் உள்ள பொருட்களையும் இயக்கலாம்.

கொஞ்ச நேரம் பயன்படுத்தாமல் விட்டால், கண்ணாடி தூங்கப்போய்விடும். அதாவது ஐகான்கள் எல்லாம் மறைந்து சாதாரணக் கண்ணாடியாகிவிடும். ஆனால் மறுபடியும் தொட்டால் எல்லா ஐகான்களும் மீண்டும் உயிர்பெற்றுவிடும். ஐகான்களை இஷ்டம் போல இடம் மாற்றிக்கொள்ளலாம்.

வடிவமைப்பாளாரான ரபேல் சொந்த ஆர்வத்தில் இந்த ஸ்மார்ட் கண்ணாடியை உருவாக்கியிருக்கிறார். இது வர்த்தக நோக்கிலானது அல்ல, தனிப்பட்ட விருப்ப‌ம் என்று அவர் கூறுகிறார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *