இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்பட்டால் நாடு ஆபத்தில் செல்லும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.

1227

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுமாயின், அது இந்த நாட்டை ஆபத்தில் தள்ளும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற கல்வியல் கல்லூரிகளை பூர்த்தி செய்த கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

பாரிய அழிவுகளை சந்தித்த இந்த நாடு, அதிலிருந்து பாடம் கற்று இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி பயணிக்காவிட்டால், இந்த நாட்டின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகும் எனவும், இந்த நிலையில், எந்தவித தாமதமும் இல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வு எடுக்கப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், 13ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக எவரும் இருக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எல்லோரும் 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொண்டு, சத்தியபிரமாணம் செய்துவிட்டு பின்னர் அதனை வழங்குவதற்கு மறுக்க முடியாது என்றும், அரசியல் இழுத்தடிப்பு இந்த நாட்டிற்கு நல்லதல்ல என்ற வகையில், இனப்பிரச்சினைக்கான முன்னெடுப்பை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் கிழக்கு மாகாண சபையை முன்னர் நிர்வகித்தவர்களின் அசமந்த போக்கே ஆசிரியர்களை மேலும் சிரமப்பட வைத்தது எனவும், தற்போது கடந்த ஒரு ஆண்டு காலமாக தாம் தொடராக மேற்கொண்ட போராட்டத்தின் வெற்றியயை கொண்டு, இன்று கிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்திலேயே கிட்டிய இடங்களில் நியமித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், துரைரெட்னம், நடராஜா, சிப்லிபாரூக், கிருஸ்ணபிள்ளை, புஸ்பராஜா ஆகியோரும் கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட மேலும் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *