தமிழ் மக்களின் விடிவுக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவருக்கும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்கள் மாத்திரமின்றி, 45 முஸ்லிம் மக்களும் மாவீரர்களாக தியாகம் செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாவீரர் நாள் நிகழ்வு நேற்று மாலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் நினைவுகூரப்பட்ட நிலையில், இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஆட்சி புரிந்த அரசாங்கங்கள் தியாகங்களைச் சரியாக மதிக்கவில்லை எனவும் குறிப்பிட்ட அவர், இரண்டு நாடுகளுக்கு இடையில் நடைபெறுவதே போர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் உள்நாட்டில் உரிமைக்காகப் போராடுவது போராகக் கொள்ளப்படுவதில்லை என்றும், இதனை விளங்கிக் கொள்ளாத நிலையினாலேயே, தமிழ் போராளிகள் மீதும், தமிழ் மக்கள் மீதும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் சீக்கியர்களை இந்திய இராணுவம் அழித்துவிட்டு வெற்றிவிழா கொண்டாட நினைத்த தருணத்தில், நம்நாட்டு மக்களை நாமே அழித்துள்ள நிலையில், இதற்கு வெற்றிவிழா வேண்டாம் என்று அப்போதிருந்த பிரதமர் இந்திராகாந்தி தெரிவித்தததையும் யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று அமெரிக்காவில் எந்த உயிரும் காவுகொள்ள முடியாத நிலையில் போர் நடைபெற வேண்டும் என்று அப்போதைய சனாதிபதி ஆபிரகாம்லிங்கன் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுக் கலவரத்தில் பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுத்தப்பட்டிருப்பதாகவும், தமிழ் மக்களின் எதிர்கால நலன்களை மையமாக வைத்தே மாபெரும் தியாகங்களை மாவீரர்கள் செய்திருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வீரத் தாய்மார் வீரர்களைப் பெற்று மண்ணுக்கு வித்துடல்களாக ஆக்கியிருப்பதாகவும், வீர மறவர்களைப் பெற்று மாபெரும் தியாகங்களைச் செய்தமைக்காக வீரத் தாய்மார்களையும் நினைவு கூர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாவீரர்களின் கனவினை முற்றுமுழுதாக நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகினாலும், தமிழ் மக்கள் மாவீரர்களின் கனவை நிறைவேற்றுகின்ற பாதைக்கு ஆரோக்கியம் தருவார்கள் என்றும், மாவீரர்களின் நோக்கத்திற்கு ஏற்ப, தற்கால சூழ்நிலைக்கு அமைவாக அதனை வெற்றியடையச் செய்வோம் என்றும் என்றும் சீனித்தம்பி யோகேஸ்வரன் சூளுரைத்துள்ளார்.