முக்கிய செய்திகள்

நல்லிணக்கத்துக்கு இராணுவமே தடையாக உள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

1320

நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் வடக்கில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் அடங்கிய குழு நேற்று கொழும்பில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்து பேச்சு நடத்திய நிலையில், அது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள முதலமைச்சர், இலங்கையில் தற்போதிருக்கும் நல்லிணக்கம் தொடர்பாகவும், ஆண் – பெண் சமநிலை பற்றியும், பெண்களுக்கான வலுவூட்டல் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதானால், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும்,போர் முடிந்து 7 ஆண்டுகளின் பின்னரும் வடக்கில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினரை நிலைகொள்ளவைத்திருப்பது நல்லிணக்கத்திற்குத் தடையாகவே இருக்கும் என்றும், வடக்கில் பொதுமக்களது 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணி, நிலங்களை படையினர் தம்வசப்படுத்தியுள்ளதுடன், அவற்றை இதுவரை சொந்தக்காரர்களிடம் படையினர் திருப்பிக் கொடுக்கவில்லை என்பதையும் விளக்கிக் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணி உரிமையாளர்களுக்கு இதுவரை எந்த விதமான நஷ்டஈடும் வழங்கப்படவில்லை என்பதுடன், அந்தக் காணிகளை அவர்கள் மீளத்தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றபோதிலும், படையினர் அவர்களது காணிகளில் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு, அதன் வருமானத்தைத் தாங்களே பெற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் வளமிக்க இந்தக் காணிகளைப் படையினரிடமிருந்து மீளப் பெற முடியாது, காணியின் சொந்தக்காரர்கள் அகதி முகாம்களில் உண்ண உணவின்றியும் வாழ்வாதாரம் எதுவுமற்ற நிலையிலும் மிக நீண்ட காலமாக வாழ்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கடல்களை தெற்கிலிருந்து வரும் சிங்கள மீனவர்கள் இராணுவத்தின் பாதுகாப்புடன் ஆக்கிரமிக்கின்றனர் எனவும், தங்கள் உரிமையைக் கேட்க முனையும் வடக்கு மீனவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் எனவும், இவ்வாறான செயல்கள் மூலம் தமிழர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்குகின்ற நிலையில், இராணுவப் பிரசன்னமானது வடக்கில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன் நல்லிணக்கத்திற்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கின்றது என்பதையும் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதைவிட வடக்கில் இராணுவத்தினர் பல்வேறு பகுதிகளிலும் தாங்களே ஆரம்பப் பாடசாலைகளை நடத்தி வருகின்றனர் எனவும், வடக்கில் ஆரம்பப் பாடசாலைகளை நடத்துவதற்கு இராணுவத்தினருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்ற போதிலும். அவர்கள் தான்தோன்றித்தனமாகவும் தங்களது நன்மைக்காகவும் இவற்றை நடத்துகின்றனர் எனவும், சிவில் பாதுகாப்புப் பிரிவின் கீழ் இவை நடாத்தப்படுவதால் பொதுமக்கள் எதனையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போல் பல்வேறு விடயங்களை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *