முக்கிய செய்திகள்
https://www.facebook.com/eelamranjanvot/videos/10156262550595637/

யாழ்ப் பல்கலைகழக மாணவர்கள் இருவர் காவல்த்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

1421

யாழ்ப்பாணம் கொக்குவில்- குளப்பிட்டி பகுதியில் நேற்றிரவு உந்துருளி விபத்தில் உயிரிழந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், காவல்த்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர்களில் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உந்துருளியை செலுத்திச் சென்ற மாணவன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மற்றைய மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளார் என்றும் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைகழகத்தின் அரசறிவியல் பீட மாணவனான 23வயது நடராஜா கஜன் , ஊடகக் கற்கைப் பிரிவைச் சேர்ந்த மாணவனான 24வயது பவுண்ராஜ் சுலக்ஷன் ஆகிய இருவருமே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்பட்ட ஐந்து காவல்த்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பின் கைது செய்யப்பட்டுள்ளனர் என அரச தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குற்ற புலனாய்வு காவல்த்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாவும் அரசின் தகவல் திணைக்கள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டே உயிரிழந்தனர் என்ற செய்தி வெளியானதை அடுத்து,  யாழ்ப்பாணத் தலைமைக் காவல் நிலையத்துக்கு கலகம் அடக்கும் காவல்த்துறையினரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், கொக்குவில் உள்ளிட்ட ஏனைய காவல் நிலையங்களின் பாதுகாப்புக்களும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை இன்று  திருகோணமலையில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வு ஒன்றிற்கு சென்றிருந்த சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரடியாக சந்தித்த எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், யாழ். நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டு இளைஞர்களின் மரணம் தொடர்பில் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

அத்துடன்  இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்தே சனாதிபதியின் பணிப்புரையின் கீழ் சிறப்பு காவல்த்துறை குழுவொன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய காவல்த்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *