முக்கிய செய்திகள்

ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

639

ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காபரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ரொரன்ரொ பல்கலைக்கழகத்தின் முதல்வர் ப்ரூஸ் கிட் இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டுள்ளார்.

பல மொழிகளுக்கு மொழியியல் கட்டமைப்பை உருவாக்க வழிகாட்டும் தமிழ் மொழியானது, இலக்கியம், பாரம்பரியத்தில் மிக உயர்ந்தது எனவம் இதன்போது அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

பல ஆண்டுகால கனவு நிறைவேற இருப்பதாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு இது மிகப் பெருமை வாய்ந்த மைல்கல் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த தமிழ் இருக்கை அமைப்பதற்கு ஐந்து மில்லியன் டாலர்கள் தேவை என்று தெரிவித்த பல்கலைக்கழகத்தின் செயல் இயக்குநர் ஜார்ஜெட் ஜிநாடி, துவக்க விழா நிகழ்ச்சியிலேயே 6 லட்சம் டாலருக்கு மேல் நன்கொடை வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த விழாவிற்காக அமெரிக்காவிலிருந்து வந்திருந்த முனைவர் விஜய் ஜானகிராமன் மற்றும் முனைவர் சம்பந்தம் ஆகியோர், முதன் முதலில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்தான் தமிழ் இருக்கை நிறுவுவதற்கான முயற்சியை மேற்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகிலேயே ஏழு செம்மொழிகளில் ஒன்றாகிய தமிழ் மொழிக்குத்தான் ஹார்வர்ட் போன்ற பல்கலைக்கழகத்தில் ஒரு தனி இருக்கை இல்லாமல் இருந்தது எனவும், ஆனால் இந்த வாரத்திற்குள் ஒக்ஸ்போர்ட, கேம்பிரிட்ஜ் மற்றும் ஹியுஸ்டன் பல்கலைக்கழகம் உட்பட ஐந்து பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் செம்மொழியாகிய தமிழை அடுத்து பல தலைமுறைகளுக்கு எடுத்து செல்வதற்கு இது வெற்றிகரமான முயற்சி என்றும் அவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *