முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் இருந்தும் இலங்கை சனாதிபதி அதிலிருந்து நழுவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்

752

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் இலங்கை சனாதிபதிக்கு இருந்தும் அவர் மௌனமாக இருப்பதாகவும், அண்மையில் மன்னாருக்கு பயணித்த சனாதிபதி இந்த விடயத்தில் நழுவல் போக்கை வெளிப்படுத்தியிருப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேருமானால் அது வடக்கு கிழக்கில் பெரும் போராக வெடிக்குமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில். அதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு போர் நிறைவுபெற்ற பின்னரும் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை எனவும், ஒரு சில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட போதிலும் அனுராதபுரம் உட்பட பல சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தினை நடாத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் பல தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சனாதிபதி மற்றும் பிரதர் உட்பட நல்லாட்சி அரசாங்கத்திடம் கோரிக்கைகள் விடுத்தபோதிலும், தொடர்ச்சியாக இவர்களின் விடுதலை இழுத்தடிக்கப்பட்டே வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், சனாதிபதிக்கு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் இருந்த போதும் அவர் மௌனம் சாதித்து வருகின்றார் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தில் வடக்கு, கிழக்கிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடுமையான கருத்துகளை முன்வைத்துள்ள போதிலும், சனாதிபதி அரசியல் கைதிகள் விடயத்தில் நழுவல் போக்கினையே கடைப்பிடிக்கும் நிலையினை காணமுடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனாதிபதி அரசியல் கைதிகள் விடயத்தில் முழுப் பொறுப்பையும் ஏற்று, அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைசெய்ய வேண்டும் என்றும், சிலவேளை அவ்வாறு விடுதலை செய்யாது விட்டு, உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் யாருக்காவது உயிர் ஆபத்துகள் ஏற்படுமானால், வடக்கு கிழக்கிலே அது பாரிய போராக வெடிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றும் அரியநேத்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *