முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் இன்று நிராகரித்தார்.

481

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்காக மற்றொரு ஆணைக்குழுவை நியமிப்பது என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் இன்று நிராகரித்தார்.

போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை இலங்கை நியமிக்கும் என நேற்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது அமர்வில் இன்று (வியாழக்கிழமை) இலங்கை குறித்த அறிக்கையை முன்வைத்து பேசும்போதே மிச்செல் பச்லெட் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை நிராகரித்தார்.

அதாவது, உள்நாட்டு செயன்முறைகள் கடந்த காலங்களில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் தனிப்பட்ட முயற்சிகள் தொடர்ந்து தோல்வியுற்றன. எனவே மற்றொரு விசாரணை ஆணைக்குழுவை அமைப்பது என்பது இந்த செயன்முறையை முன்னோக்கிக் கொண்டுசெல்லும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என அவர் கூறினார்.

அத்தோடு இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, ஐ.நா.வின் 30/1 தீர்மானம் குறித்து புதிய அரசாங்கம் மிகவும் மாறுபட்ட அணுகுமுறையை அறிவித்திருப்பதற்கு அவர் கவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த அறிவிப்பையடுத்து, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கான முயற்சிகளைத் தடுக்கும் அபாயங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அரசாங்கம் தனது அனைத்து மக்களுக்காகவும் செயற்பட வேண்டும். அனைத்து சமூகங்களின் தேவைகளையும், குறிப்பாக சிறுபான்மையினரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகக் கிடைத்த நன்மைகளைப் பாதுகாக்கவும் கட்டியெழுப்பவும் நான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக, காணாமற்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான ஆதரவை வழங்குவதை உறுதி செய்ய அரசாங்கத்தை கோருகின்றேன். அனைத்து சமூகங்களைப் போலவே நீதி மற்றும் நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கும் தகுதி உள்ளது எனவும் அவர் கூறினார்.

இலங்கையின் சுயாதீன நிறுவனங்கள், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் பலப்படுத்தப்பட்டுள்ளன. இது ஜனநாயகக் கட்டமைப்பில் ஒரு முக்கிய தூணாகும். மேலும் சிவில் சமூகம் மற்றும் சுயாதீன ஊடகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே பாதுகாப்பு அமைச்சின் கீழ் அல்லது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளின் கீழ் மக்களின் செயற்பாடுகளை நகர்த்துவதற்கான சமீபத்திய போக்கு குறித்து நான் கவலையடைகின்றேன்.

மேலும் மனித உரிமை அமைப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான கண்காணிப்பு போன்ற புதிய அறிக்கைகளும் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சு, பாதுகாப்பு அச்சுறுத்தல், சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கை நடவடிக்கைகள், தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சம் குறித்து வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

கடந்த கால மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கான தண்டனையை இலங்கை இன்னும் வழங்கவில்லை. அல்லது இவற்றை நிவர்த்தி செய்யத் தேவையான பாதுகாப்பு துறை குறித்த சீர்திருத்தங்களையும் மேற்கொள்ளவில்லை என்பதே அடிப்படைக் பிரச்சினையாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவை குற்றவியல் நீதி முறைமைக்குள் தொடர்ந்து நிலவும் பிரதான தடையாக உள்ளதாக மிச்செல் பச்லெட் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *