முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகின்ற போதிலும் அன்றைய தினத்தில் ஜனாதிபதியின் கொள்கை உரை மட்டுமே இடம்பெறும்

584

பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் மஹிந்த – மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கமும், ஐக்கிய தேசியக் கட்சியும் முயற்சித்து வருகின்ற நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகின்ற போதிலும் அன்றைய தினத்தில் ஜனாதிபதியின் கொள்கை உரை மட்டுமே இடம்பெறும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்வட்டமாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதியன்று எந்தவொரு பிரதமருக்கெதிரான பிரேரணையோ அல்லது பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான நிகழ்ச்சியோ ஒழுங்குப் பத்திரத்தில் இதுவரை சேர்க்கப்படவில்லை என்று சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட சர்வதேச நாடுகள் அழுத்தம் பிரயோகித்து வருகின்ற நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்ட ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி கூடுவதற்கான அறிவிப்பை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளார்.

யார் பிரதமர் என்கிற குழப்பநிலைக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஏட்டிக்குப் போட்டியான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா நாடாளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதியே கூடும் என்பதை திட்டவட்டமாக அறிவித்தார்.

அதேபோல அன்றைய தினத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிவிப்பு மட்டுமே இடம்பெறும் என்பதோடு எந்தவொரு பிரேரணையோ அல்லது பெரும்பான்மை நிரூபிப்பதற்கான முயற்சிகளோ இடம்பெறாது எனவும் குறிப்பிட்டார். எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்பாக நாடாளுமன்றம் கூட்டப்படாது. 14ஆம் திகதியே நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான அறிவிப்பை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட திகதிக்கு முன்னதாக சபையை கூட்டுவதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை. அதனால் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் சபை கூடும். அன்றைய தினத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிவிப்பு இடம்பெறும். பலர் பல விதத்தில் விமர்சிக்கின்றனர். அன்றைய தினம் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.

எனினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தாலோ அல்லது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாலோ அன்றைய தினம் நடைபெறாது. 14ஆம் திகதிக்குரிய ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சபை கூட்டப்பட்ட பின்னர் ஜனாதிபதியின் அறிவிப்பு மட்டுமே இடம்பெறும். அதன் பின்னர் சபை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைக்கப்படும்.

அதன் பின்னர் கட்சித் தலைவர்கள் கூடி அடுத்த ஒழுங்குப் பத்திரத்தை தயாரிப்பார்கள். அதில் நம்பிக்கையில்லா பிரேரணையா அல்லது வேறு நடவடிக்கைகளா என்பது பற்றிய தீர்மானம் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே மேற்கொள்ளப்படும். அதனால் இதுகுறித்து பல விடயங்கள் பலரும் கூறிவருவதால் அதனை தெளிவுபடுத்துவது எமது கடமையாக எண்ணுகிறேன். சபாநாயகர் தொடர்பாக அல்ல, அவரது செயற்பாடுகள் குறித்துதான் எமக்கு பிரச்சினை எழுந்துள்ளது. பக்கச்சார்பாக அவர் செயற்பட முடியாது”

இதேவேளை அநுராதபுரத்திலுள்ள தனது இல்லத்தில் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த கமகே, நாடாளுமன்றத்திலும், எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாக அறிவித்தார். ‘மாகாண சபை தேர்தல் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் தயாராக இருக்கின்றோம்.

நாடாளுமன்றில் பெரும்பான்மையை காண்பிப்பதற்கும், அடுத்த மாகாண சபைகள் மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தடுமாறுகின்ற பிரிவினர் சபையை கூட்டாமல் வீதிகளில் வீராப்பு கதைகளைப் பேசுகிறார்கள். முதலில் நாடாளுமன்றத்தைக் கூட்டி அந்த சட்டவிரோத பிரதமர் மற்றும் அமைச்சரவையை காலில் எட்டி உதைத்து வெளியே தள்ளி நாட்டை வழமைக்கு இட்டுச் செல்வதோடு தேர்தலிலும் வெற்றிபெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்”




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *