முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கறுப்பின மக்களின் விடிவெள்ளி நெல்சன் மண்டேலா பிறந்த தினம்: ஜூலை 18- 1918

1292

நெல்சன் மண்டேலா (18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ராணுவப் பிரிவுக்கு

கறுப்பின மக்களின் விடிவெள்ளி நெல்சன் மண்டேலா பிறந்த தினம்: ஜூலை 18- 1918
நெல்சன் மண்டேலா (18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார்.

இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990-ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008-ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

நெல்சன் மண்டேலா 1918-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம்தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவர். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவரதான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் ‘நெல்சன் ரோபிசலா மண்டேலா’. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்றார்.

அந்தக் குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள “நெல்சன்” இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941-ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.

அப்போது ‘நோமதாம் சங்கர்’ என்ற செவிலியரைத் திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது. ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958-ம் ஆண்டு ‘வின்னி மடிகி லேனா’ என்பவரை மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும் 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளனர்.

மண்டேலா 1962-ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.

பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்னாப்பிரிக்க அரசாங்கம். மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988-ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெக்ளார்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 1990-ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார். விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

தென்னாப்பிரிக்கா அரசு அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி. பி. சிங் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

பின்னர் மண்டேலாவை காவலர் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்னாப்பிரிக்கா முழுவதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-

இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.

1994 மே 10-ந்தேதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனபின், 1998-ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன்பின் 1999-ல் பதவியை விட்டு விலகினார். இவர் 2-வது முறை அதிபர் பதவிக்கு போட்டியட மறுத்துவிட்டார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 ஜூன் மாதம் 8-ம் தேதி மண்டேலா பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவின் அலுவலகம் 2013 ஜூன் 23-ம் தேதி அறிவித்தது.

மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால், 2013 ஜூன் 27-ம்தேதி ஜனாதிபதி யாக்கோபு சூமா தனது மொசாம்பிக் பயணத்தை ரத்து செய்தார். நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் பூர்வீக வீட்டிற்கு அவசரமாக வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மண்டேலா நலமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை நடத்தி வந்தனர்.

5 டிசம்பர் 2013 அன்று தனது 95-வது வயதில் சிகிச்சை பலனின்றி காலமானார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *