முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

காவிரி மேலாண்மை வாரியம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது?

1952

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கூறியபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென தமிழக அரசு கூறுகிறது. ஆனால், அப்படி ஒரு அமைப்பை உருவாக்க உச்ச நீதிமன்றம் வலியுறுத்தவில்லையென்கிறது கர்நாடகா. மத்திய அரசு, இந்தத் தீர்ப்பு குறித்தே விளக்கம் கேட்கிறது. உண்மையில், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன?

காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியான பிறகு, 2007ஆம் ஆண்டில் இதில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுமே, அதாவது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இறுதித் தீர்ப்பை மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.

இந்த மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், கான்வில்கர் அடங்கிய அமர்வு பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு, காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின் ஒரே ஒரு அம்சத்தைத் தவிர பிற அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவு மட்டும் 192 டிஎம்சிக்குப் பதிலாக 177.25 டிஎம்சியாகக் குறைக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, இந்தத் தீர்ப்பை செயல்படுத்துவது குறித்து, தீர்ப்பின் 456-57ஆம் பக்கங்களில் பேசும் உச்ச நீதிமன்றம், “இதற்கென ஒரு திட்டத்தை (Scheme) உருவாக்குவதன் நோக்கமே, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்காகத்தான்.. இதற்கான திட்டத்தை மத்திய அரசு இன்றிலிருந்து 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும். அப்போதுதான், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரிகள், நடுவர் மன்றத்தின் ஆணையை எளிதாகச் செயல்படுத்துவதோடு, எங்களால் விதிக்கப்பட்டபடி மாநிலங்களின் உரிமையையும் செயல்படுத்த முடியும்” என்று குறிப்பிடுகிறது.

பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பு வெளியாகியிருக்கும் நிலையில், மார்ச் 29ஆம் தேதியோடு உச்ச நீதிமன்றம் விதித்த ஆறு வாரக் கெடு முடிவடைந்தது. இந்நிலையில்தான் இந்த வரிகளில் குறிப்பிட்டிருக்கும் Scheme என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது.

கர்நாடகத்தின் தரப்பிலும்கூட Scheme என்றுதான் உச்ச நீதிமன்றம் குறிப்பிடுகிறதே தவிர, காவிரி மேலாண்மைவாரியம் எனக் குறிப்பிடப்படவில்லை என்று வாதிடப்பட்டுவருகிறது. குஜராத்தில் உள்ள நர்மதா நீர் ஆணையத்தைப் போல ஒன்றை உருவாக்கலாம் எனவும் வாதிடப்படுகிறது.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் என்பதையே Scheme என்ற வார்த்தை குறிப்பிடுகிறது; ஆகவே, 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்க வேண்டும் என்கிறது தமிழகத் தரப்பு.

காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஊன்றிப் படித்தவர்கள், Scheme என குறிப்பிடப்படுவது காவிரி மேலாண்மை வாரியம்தான் என்கிறார்கள். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து விரிவாகப் பேசும் உச்ச நீதிமன்றம், அந்த நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் அமைப்பு குறித்து அந்தத் தீர்ப்பிலேயே கூறப்பட்டிருப்பதை மேற்கோள்காட்டியுள்ளது.

தன்னுடைய இறுதித் தீர்ப்பு எந்த முறையில் செயல்படுத்தப்பட வேண்டுமென நடுவர் மன்றம் கூறியிருப்பதை தீர்ப்பின் 335-336ஆம் பக்கங்களில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

“இறுதித் தீர்ப்பை செயல்படுத்த ஒரு திட்டத்தை (Scheme) வகுக்க வேண்டுமெனக் கூறினால், அது ஒரு குழப்பமான சூழலுக்கு இட்டுச்செல்லக்கூடும் என நடுவர் மன்றம் கருதுகிறது. 1980ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையிலான தாவா சட்டமும் இம்மாதிரியான ஒரு அமைப்பை உருவாக்கி செயல்படுத்துவது குறித்து ஏதும் கூறவில்லை. என்றாலும்கூட, இது தொடர்பான பரிந்துரையை அளிக்க நடுவர் மன்றத்திற்கு இந்தச் சட்டம் அதிகாரமளிக்கிறது. அதன் அடிப்படையில், பக்ரா – பீஸ் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்ததைப் போல காவிரி மேலாண்மை வாரியத்தையும் மத்திய அரசு அமைக்க வேண்டும்” என காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

“தமிழகத்திற்கான தண்ணீரின் அளவைக் குறைத்ததைத் தவிர்த்த பிற விஷயங்களில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே, Scheme என்று சொல்லப்படுவது காவிரி மேலாண்மை வாரியம்தான். ஓரிடத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் ரஞ்சித் குமார், Schemeஐ வேண்டுமென்றால் (may) அமைக்கலாம் என்று தீர்ப்பளிக்கும்படி வாதிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், அவரது வாதத்தை ஏற்காமல் கண்டிப்பாக (Shall) அமைக்க வேண்டுமெனக் கூறியது. ஆகவே Scheme என்பது மேலாண்மை வாரியம்தான்” என்கிறார் உச்ச நீதிமன்ற விவகாரங்களை நீண்ட காலமாக கவனித்துவரும் மூத்த பத்திரிகையாளர் ஜே. வெங்கடேசன்.

இருந்தாலும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் இறுதியில், “1956ஆம் ஆண்டுச் சட்டம் பிரிவு 6-ஏவின்படி, உருவாக்கப்படும் Scheme..” என்று சொல்லியிருப்பதற்குப் பதிலாக காவிரி மேலாண்மை வாரியம் என்று குறிப்பிட்டிருந்தால் இவ்வளவு குழப்பம் வந்திருக்காது என்கிறார் வெங்கடேசன்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *