முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஜெனிவாவில் மற்றொரு தீர்மானத்தை தவிர்க்கும் முயற்சியில் இலங்கை அரசு மும்முரம் காட்டிவருவதாக தெரிவிக்கப்படுகிறது

573

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 10ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை குறித்து மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படுவதைத் தவிர்ப்பதையும், ஏற்கனவே இணை அனுசரணை வழங்கியுள்ள தீர்மானத்திலிருந்து வெளியேறுவதையும் இலக்காகக் கொண்ட இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

செப்டெம்பர் 10ஆம் நாள் முதல் 28ஆம் நாள் வரை நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து இரண்டு அறிக்கைகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் அனைத்துலக அமைப்புகள் கேள்விகளை எழுப்பவுள்ளன என்பதுடன், இதனைவிட உப குழுக்கூட்டங்கள் சிலவும் இடம்பெறவிருக்கின்றன.

கடந்த ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இரண்டு சிறப்பு ஐ.நா. நிபுணர்களின் அறிக்கைகளே இலங்கை தொடர்பில் வெளியிடப்படவுள்ளதுடன், இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான சிறப்பு நிபுணரின் அறிக்கை முதலில் வெளியிடப்படும் எனவும், இது குறித்த விவாதம் எதிர்வரும் 12ஆம் நாள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரீப்பின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இது தொடர்பான விவாதம் ஜெனிவாவில் 13ஆம் நாள் நடைபெறவுள்ளது.

இவை இரண்டையும் எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராகிவரும் அதேவேளை, இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்த 25 விடயங்களில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாகக் காட்டிக்கொள்வதன் மூலம், தமக்கு எதிராக மற்றொரு பிரேரணை கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்கான இராஜதந்திர நகர்வுகளையும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக பொறுப்புக் கூறல் விடயத்தைத் தவிர ஏனைய விடயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டிருப்பதாக அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் பிரசாரப்படுத்திவருவதாக ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அனைத்துலக சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைத்தது என்ற அடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னதாக இதிலிருந்து வெளியேற அல்லது, புதிய தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு முக்கிய தேர்தல்கள் வரவிருப்பதால், தமக்குள்ள நெருக்கடிகளையிட்டு மேற்கு நாட்டு இராஜதந்திரிகளுக்கு இலங்கை இராஜதந்திரிகள் விளக்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *