முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தாயகத்தில் எம்மக்கள் பலர் மத்தியில் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாது போய்விட்டமை குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார்

555

நீண்டகால போரின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டு துன்பச் சுமைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆத்திசூடி வீதி இன்று மாலை இடம்பெற்ற கலைமகள் சனசமூக நிலையத்தின் 65வது ஆண்டு விழா மற்றும் பிரதேச மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நீண்டகால போரின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டு துன்பச் சுமைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது எனவும், இவர்களின் துயரைத் துடைப்பதற்கு கடல் கடந்த நாடுகளில் உள்ள அவர்களின் உறவுகளும்,சமூக அமைப்புகளும், அரசுசாரா நிறுவனங்களும், பரோபகாரிகளும், தனவந்தர்களும் பல்வேறு உதவிகளைப் புரிந்து வருகின்றார்கள் என்பது உண்மை தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது மக்களும் இவ்வாறான உதவிகள் கிடைக்கப்பெறுகின்ற போது தமது துன்பச் சுமைகளில் இருந்து சற்று விடுபட்டு இவ் உதவிகளுடன் வாழத்தலைப்பட்டுள்ளார்கள் எனவும், ஆனால் அதன் விளைவாக எம்மில் பலரின் மத்தியில் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாது போய்விட்டது எனவும் அவர் கவலை வெளியிட்டுளளார்.

தற்போது கிடைக்கின்ற உதவிகள் தொடர்ச்சியாகக் கிடைக்கும் என்று உறுதிப்படுத்தப்பட முடியாதவை என்பதையும், இவ்வாறான உதவிகள் நிறுத்தப்படுகின்ற போது எம் மக்கள் உதவியற்றவர்களாக உழைக்க வழி தெரியாதவர்களாக விடப்படுவார்கள் என்பதையும், அப்போது அவர்கள்குறுக்கு வழிகளில் பணத்தைத் தேட முயலவேண்டியிருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய பல கொலை, கொள்ளைகள் போன்றவை இவ்வாறு கைவிடப்பட்டவர்களால் இயற்றப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழாமலில்லை எனவும், ஆகவே தான் எம் மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள், அந்தந்த உதவிகளை மூலதனமாகக் கொண்டு அவற்றின் மூலம் வாழ்வாதார முயற்சிக்கான தொழில் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளக்கூடிய வகையில் அவை அமைந்திருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனை மீண்டும் மீண்டும் பகிரங்கமாகக் கூறிவருவதாகவும், அதாவது எமக்குக் கிடைக்கும் உதவிகள் நுகர்வதற்குப் பாவிக்கப்படாமல் உற்பத்தியை உண்டுபண்ணவும், பெருகச் செய்வதற்கும் உதவ வேண்டும் எனவும், அவ்வாறில்லாமல் அவ்வப்போது வழங்கப்படுகின்ற உதவிகள் உந்துருளிகளை வாங்குவதற்கும், கைத்தொலைபேசிகள் வாங்குவதற்கும், குளிர்பதனப் பெட்டிகளை வாங்குவதற்கும் பாவிக்கப்பட்டால், எம்மக்களை சோம்பேறிகளாக்குவதற்கான உதவிகளாகவே அவற்றை பார்க்க வேண்டியுள்ளது என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *