முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தியாகி அன்னை பூபதி

540

தியாகதீபம் அன்னை பூபதி உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்த நாள் இன்றாகும்.

இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்தும் போர் நிறுத்தப்பட வேண்டும், விடுதலைப்புலிகளுடன் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் எனும் கோரிக்கைகளை இந்திய- சிறிலங்கா அரசுகளிடம் வலியுறுத்தி, 1988 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 19ஆம் நாள் அன்னை பூபதி சாகும்வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறி தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது. அவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழீழத் தேசியத்திற்கு ஆதரவாக தமிழீழப் பொதுமக்கள் பல வகைகளில் தமது பங்களிப்பை வழங்கினார்கள். இந்தத் தேசத்திற்கான பங்களிப்புக்களின் சிகரமாக தியாகத்தின் அதியுயர் வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது. இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும் என்று கோரி மட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில் திருமதி பூபதி கணபதிப்பிள்ளை அவர்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். 1988ம் ஆண்டு மார்ச் மாதம் பத்தொன்பதாம் திகதி சனிக்கிழமை காலை 10-45 மணிக்கு மட்டக்களப்பு அமிர்தகழி சிறி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னலில் உள்ள குருந்த மரநிழலின் கீழ் அன்னை பூபதி தனது சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்

தமிழீழ விடுதலைப் போராட்டம் மிக நெருக்கடியான வேளையை சந்தித்த காலம் அது! “இந்திய ராணுவம் எமது தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்த தினத்தையே எமது போராட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன். எமது போராட்டத்தில் இந்திய ராணுவம் தலையீடு செய்தது ஓர் இருண்ட அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும்” என்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் இந்த இராணுவ ஆக்கிரமிப்புக் குறித்துக் கூறுமளவுக்கு அன்றைய காலகட்டம் பல நெருக்கடிகளை நேர்கொண்டது. உலகின் நான்காவது பெரிய இராணுவமான இந்தியப் படையினர் ஒருபுறம். சிங்கள பௌத்தப் பேரினவாத சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் சிறிலங்காவின் இரணுவம் மறுபுறம் இவையிரண்டிற்கும் துணையாக நிற்கின்ற தமிழ் ஒட்டுக்குழுக்கள் ஒருபுறம் என்ற ஈழத் தமிழினம் இன்னல்களை எதிர்கொண்ட வேளை அது. தேசியத்தலைவர் சொன்னதுபோல் தமிழீழப் போராட்ட வரலாற்றில் இருண்ட அத்தியாயத்தின் காலம் அது.

இத்தனை அபாயங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில் ஒரு சாதாரண பெண்மணி, குடும்பத் தலைவி, எவற்றிற்கும் அஞ்சாமல் தனது போராட்டத்தை அகிம்சை வழியில் ஆரம்பிப்பதற்கு எத்துணை செஞ்சுரமும் தியாக மனப்பான்மையும் அவருக்கு இருந்திருக்கும் என்பதை நாம் நினைத்துப் பார்க்கின்றோம்.

“எம்மைப் பாதுகாக்கவென வந்த இந்தியா இன்று சிறிலங்கா இராணுவத்தைக் காட்டிலும் கொடியவர்களாகவே மாறிவிட்டார்கள். இதனைத் தடுக்கலாம் என்ற உறுதியுடன் நாம் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். வீரச்சாவுகளை கண்டு நாம் பழகிப் போனவர்களே. எனது இறப்பை அடுத்தும், எமது நோக்கை நாம் அடைவோம் ஒருபோதும் அன்னையர் முன்னணி தளராது” என்று அன்னை பூபதி அவர்கள் தியாக உணர்வோடு, செஞ்சுரத்தோடு முழங்கினார்.

1988ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி சனிக்கிழமை காலை 10-45 மணிக்குத் தனது சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்த அன்னை பூபதி அவர்களின் இறுதி மூச்சு தமிழீழக் காற்றோடு ஏப்பிரல் மாதம் 19ம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 8-45 மணியளவில் கலந்து பரவியது.

திருமதி பூபதி கணபதிப்பிள்ளை என்கின்ற ஒரு சாதாரணத் தமிழ் பெண்மணியின் விடுதலை வேட்கையும் அதற்கான தியாகமும் நாட்டுப்பற்றின் சிகரமாக அமைந்தது.

ஓர் இனத்தின் அரசியல் விடிவிற்காகவும் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராகவும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடாத்தி உயிர்த்தியாகம் செய்திட்ட உலகின் முதற் பெண்மணி என்ற வகையிலும் ஒரு சதாரண குடும்பப்பெண் தனது தனிப்பட்ட வாழ்வைத் துறந்து தனது நாட்டுக்காக முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் என்ற வகையிலும் அன்னை பூபதி அவர்களின் போராட்டம் பல விழுமியங்களை தொட்டு நிற்கின்றது. இவர் ஒரு விடுதலைப் போராளி அல்லர்! விடுதலைப் போராளி என்ற வகையில் தியாகி திலீபன் அவர்கள் ஒரு சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தனது இன்னுயிரை ஈந்திருந்தார். ஆனால் போராளியாக இல்லாத ஒருவர் – சாதாரணப் பெண்மணி – குடும்பத் தலைவி – தன்னைத்தன் மக்களுக்காக மட்டுமன்றி, தனது போராளிகளுக்காகவும் தன்னை தற்கொடையாக்கிய செயல் என்பதானது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும்.

“மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தம் உயிரைத் தருகின்ற போராளிகளின் இலட்சியத்திற்காகத் தன் உயிரைத் தாரை வார்க்க முன்வந்த அன்னை பூபதியின் தியாகம் நாட்டுப்பற்றாளர்களின் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் ஒரு குறியீடாகும்.! அந்த வகையில் அன்னை பூபதியின் நினைவு தினம் என்பதானது நாட்டுப்பற்றாளர் தினம்” என்று தமிழீழத் தேசியத் தலைமையினால் பிரகடனப் படுத்தப்பட்டது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *